கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் சரக்கு வாகனம் குழிக்குள் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு


கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் சரக்கு வாகனம் குழிக்குள் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2021 9:00 PM GMT (Updated: 23 Oct 2021 9:00 PM GMT)

கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் சரக்கு வாகனம் குழிக்குள் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஈரோடு
கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் சரக்கு வாகனம் குழிக்குள் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குண்டும்-குழியுமான ரோடு
பாதாள சாக்கடை திட்டம், மின் கேபிள் பதிக்கும் திட்டம், ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்காக ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோடு தோண்டப்பட்டது. தற்போது பணிகள் முடிந்து குழிகள் நிரப்பப்பட்டு உள்ளன. குழிகள் சரியாக மூடப்படாததால் காவிரி ரோடு தற்போது குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
ஈரோட்டில் இருந்து சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, சென்னை போன்ற பகுதிகளுக்கு காவிரி ரோடு வழியாகத்தான் செல்ல வேண்டும். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருவதால் இந்த ரோடு எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
குழிக்குள் சிக்கிய வாகனம்
தற்போது காவிரி ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால் வண்டியூரான் கோவில் வீதியில் இருந்து ஆர்.கே.வி.ரோடு வரை செல்ல நீண்ட நேரம் ஆகிறது. மேலும் வாகனங்களை ஓட்டிச்செல்லவும் வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்கள் குழிக்குள் ஏறி இறங்கும்போது நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர்.
நேற்று முன்தினம் இரவில் மழை பெய்ததன் காரணமாக காவிரி ரோடு சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற சரக்கு வேன் ஒன்று குழிக்குள் சிக்கியது. இதனால் அந்த வாகனத்தால் மேற்கொண்டு செல்லமுடியாமல் நடுரோட்டில் நின்றது.
போக்குவரத்து பாதிப்பு
இதன் காரணமாக ஈரோட்டில் இருந்து நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்ற வாகனங்களும், இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்த வாகனங்களும் மேற்கொண்டு செல்ல முடியாமல் அணிவகுந்து நின்றது.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீஸ் ஒருவர், அந்த பகுதியை சேர்ந்த சிலருடன் சேர்ந்து குழிக்குள் சிக்கிய வாகனத்தை தள்ளி வெளியில் எடுத்தார். அதன் பின்னர் அந்த சரக்கு வேன் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக காவிரி ரோட்டில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த ரோட்டை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story