புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Oct 2021 2:30 AM IST (Updated: 24 Oct 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

பொது இடங்களில் குப்பை
புஞ்சைபுளியம்பட்டியில் பஸ்நிலைய பகுதி, போலீஸ் நிலைய பகுதி மற்றும்  பள்ளிக்கூடம் அருகே குப்பைகளை ெகாண்டு வந்து கொட்டுகிறார்கள். குப்பைகளும் முழுவதுமாக அள்ளப்படுவதில்லை. இதனால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். முைறயாக குப்பைகளை அள்ளிச்செல்ல ஆவன செய்ய வேண்டும்.
ஊர்பொதுமக்கள், புஞ்சைபுளியம்பட்டி.

உயரமான பாலம்
சென்னிமலை அருகே உள்ள முகாசிபிடாரியூர் பாப்பாங்காடு பகுதியில்,  டெலிபோன் அலுவலக வீதியில் சாக்கடை பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் ரோட்டை விட ஒரு அடி உயரமாக உள்ளது. இதனால் கார், சரக்கு ஆட்டோக்கள் பாலத்தை கடக்கும்போது அடிப்பகுதி உரசி சேதமாகிறது. எனவே பாலத்தில் இருபுறமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை ஒரு அடி உயர்த்த வேண்டும்.
ருத்ரமூர்த்தி, முகாசிபிடாரியூர்.

மரத்தில் உரசும் மின்கம்பி 
கோபி அருகே உள்ள பழைய வள்ளியாம்பாளையத்தில் சத்தி-கோட்டுப்புள்ளாம்பாளையம் செல்லும் ரோட்டின் ஓரத்தில் மரத்தை உரசியவாறு உயர் அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. இது மழை காலம் என்பதால் பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படுவதற்குள் மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பிகள் மீது உரசும் மரக்கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோட்டுப்புள்ளாம்பாளையம்.

தெருவிளக்கு ஒளிருமா?
ஈரோடு எல்லப்பாளையம் சாத்வீக வர்ஷா நகரில் தெருவிளக்கு இல்லை. இரவில் பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் வருவதால் வெளியில் செல்ல மிகவும் பயமாக உள்ளது. மேலும் மதுபிரியர்கள் குடித்துவிட்டு தெருவில் விழுந்து கிடப்பதால் பெண்கள் வெளியில் செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே எங்கள் பகுதியில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், எல்லப்பாளையம்.

டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்
ஈரோடு அகில்மேடு 6-வது வீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது வாங்கும் மது பிரியர்கள் சிலர் டாஸ்மாக் கடைக்கு எதிரில் அமர்ந்து மது அருந்துகின்றனர். பின்னர் போதையில் மது பாட்டில்களை ரோட்டில் போட்டு உடைப்பதும், ரோட்டில் செல்பவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதுமாக உள்ளனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது மட்டுமின்றி, அந்த வழியாக செல்லும் பெண்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அகில்மேடு 6-வது வீதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கபிலன், ஈரோடு.

தெருவில் தேங்கும் மழைநீர் 
ஈரோடு சாஸ்திரிநகர் சடையம்பாளையம் ரோடு குறிஞ்சி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை நீர் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக செல்லும் பழைய வாய்க்கால் தூர்வாரப்படாததால் மழைநீர் செல்லவழியின்றி தெருவில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக நடந்து மற்றும் வாகனங்களில் செல்ல முடியவில்லை. தண்ணீர் வடிய வழியில்லாமல் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே எங்கள் பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
குப்புசாமி, ஈரோடு.

ஒளிராத மின்விளக்கு
அந்தியூர் பிரம்மதேசம் கிராமம் பெத்தாரண்ணன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே மின்கம்பம் உள்ளது. இதில் உள்ள மின்விளக்கானது கடந்த ஒரு வாரமாக எரியவில்லை. இதனால் இருளாக இருப்பதால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். உடனே மின்விளக்கை ஒளிர செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வசந்த், பிரம்மதேசம்.
 

பாராட்டு
ஈரோடு பெரியவலசு நால்ரோடு பகுதியில் ரோடு குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். எனவே ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுபற்றிய செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெரியவலசு நால்ரோடு பகுதியில் குண்டும், குழியுமான ரோடு சீரமைக்கப்பட்டு உள்ளது. செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.
குமரேசன், ஈரோடு.


Next Story