கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நிவாரண உதவிக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை- அமைச்சர் சு.முத்துசாமி எச்சரிக்கை
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நிவாரண உதவிக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நிவாரண உதவிக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒற்றை சாளர முறை
தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் பணி தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் தற்போது 191 பேருக்கு ரூ.1 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு துறையை முதல் -அமைச்சர் ஆய்வு செய்து வருகிறார்.
பெரிய திட்டங்கள், நடுத்தர திட்டங்கள், பொதுமக்கள் அன்றாடம் சந்திக்கின்ற பிரச்சினைகள், நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழகத்தில் வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த பலமுறை வாய்ப்பு கொடுக்கப்பட்டு விட்டது. எனினும் கோர்ட்டு உத்தரவின்படி மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படும். வீடு கட்டுவதற்கான அனுமதி பெறுவதை எளிமைப்படுத்த ஒற்றை சாளர முறை கொண்டு வரப்படும்.
50 கட்டிடங்கள்
தமிழகம் முழுவதும் 195 இடங்களில் அரசின் வாடகை குடியிருப்புகளில் 50 கட்டிடங்கள் மிகவும் மோசமாக உள்ளது. இந்த கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிதாக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஈரோட்டில் பயன்படுத்த முடியாத கட்டிடங்கள் அனைத்தையும் இடித்து புதிதாக கட்டவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அரசின் பணத்தையும், வீட்டு வசதி வாரியத்தின் பணத்தையும் வைத்து பணிகளை தொடங்கினால் ஆண்டுக்கு 5 அல்லது 6 திட்டங்களை தான் செய்ய முடியும். தமிழகம் முழுவதும் உள்ள 50 பணிகளையும் உடனடியாக ஆரம்பித்து 2 ஆண்டுகளில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தனி கவனம்
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசின் நிவாரண உதவிக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்னிடமோ?, அல்லது மாவட்ட கலெக்டரிடமோ தெரிவியுங்கள். இந்த உதவியே பரிதாபமான நிலையில் உள்ளவர்களுக்கு அளிப்பது. இதுதொடர்பாக புகார் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் பெரிய திட்டங்களை நிறைவேற்றுவதற்காக தனியாக ஆய்வு செய்யப்பட்டு, அப்பணிகள் தொடர்பான முன்னேற்றம் குறித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அன்றாடம் சந்திக்க கூடிய குடிநீர், சாக்கடை, சாலை, மின் விளக்கு பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
ரூ.20 கோடி ஒதுக்கீடு
ஈரோடு மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க தனியாக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், அந்த பகுதியின் பிரச்சினையை கூறி 15 நாள் காலஅவகாசத்தில் முடிக்க அறிவுறுத்தியுள்ளோம். மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈரோடு மாநகரில் குண்டும் -குழியுமான சாலைகளை மீண்டும் போட அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அனைத்து திட்ட பணிகளும் முடிவடைந்த உடன் ரோடுகள் சீரமைக்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் 2 பஸ் நிலையம், அரசு கல்லூரியான சி.என்.கல்லூரியை மேம்படுத்துவது, மஞ்சள் ஆராய்ச்சி மையம் என 100-க்கும் மேற்பட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஈரோடு அரசு ஆஸ்பத்திரி சந்திப்பில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
Related Tags :
Next Story