கோபி அருகே 50 வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது


கோபி அருகே 50 வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது
x
தினத்தந்தி 24 Oct 2021 2:32 AM IST (Updated: 24 Oct 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே 50 வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.

கடத்தூர்
கோபி அருகே 50 வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. 
விடிய விடிய கனமழை
கோபி மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் விடிய விடிய கன மழை கொட்டியது.
கோபி கூகலூர் அருகே உள்ள தொட்டிபாளையம் பகுதியில் கூகலூர் கிளை வாய்க்கால் மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால்களில் ஏற்கனவே பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் தொடர் கன மழை காரணமாக வாய்க்கால் நிரம்பி தண்ணீர் வெளியேற தொடங்கியது.
இந்நிலையில் தொட்டிபாளையம் பிரிவில் உள்ள கூகலூர் கிளை வாய்க்காலில் அப்பகுதியை சேர்ந்த சிலர், வைக்கோல், கற்களை போட்டு ஆக்கிரமித்து இருந்ததால் தண்ணீர் வாய்க்காலை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்தது. 
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
அப்போது அந்த பகுதியில் நள்ளிரவு சுமார் 50 வீடுகளுக்குள் மழை வெள்ளமும், வாய்க்கால் தண்ணீரும் புகுந்தது.
வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து மேடான இடங்களில் தங்கினார்கள். விடிய விடிய தூங்க முடியாமல் தவித்தார்கள். அதைத்தொடர்ந்து நேற்று காலை வீடுகளுக்குள் இருந்த தண்ணீரை வெளியேற்றினார்கள். 
அகலத்தை குறைத்ததால்...
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘கூகலூர் கிளை வாய்க்கால் 6 அடி அகலமாக இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் சீரமைப்பு பணிகள் நடந்தபோது அகலத்தை 3 அடியாக குறைத்து விட்டனர். மேலும் தண்ணீர் வராத காலங்களில் வாய்க்காலில் வைக்கோல் போரையும், கற்களையும் பொதுமக்கள் போட்டு ஆக்கிரமித்துவிடுகிறார்கள். திடீரென வாய்க்காலில் தண்ணீர் வந்ததால் கொள்ளளவு குறைந்து வாய்க்காலை விட்டு தண்ணீர் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே அதிகாரிகள் வாய்க்காலை மீண்டும் 6 அடி அகலத்துக்கு வெட்டவும், பொதுமக்கள் அதை ஆக்கிரமிக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்கள். 

Next Story