பேரனை கொன்ற சப் இன்ஸ்பெக்டர் மனைவி கைது


பேரனை கொன்ற சப் இன்ஸ்பெக்டர் மனைவி கைது
x
தினத்தந்தி 24 Oct 2021 10:24 PM IST (Updated: 24 Oct 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

பேரனை கொன்ற சப் இன்ஸ்பெக்டர் மனைவி கைது

துடியலூர்

பேரனை கொன்ற சப்-இன்ஸ்பெக்டர் மனைவி கைது செய்யப்பட்டார். அவர், உறவினர் வீட்டில் பதுங்கி இருந்தபோது போலீசில் சிக்கினார். 

இரட்டை குழந்தைகள் 

கோவையை அடுத்த கவுண்டம்பாளையம் நாகப்பாகாலனியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 31), என்ஜினீயர். இவரது மனைவி ஐஸ்வர்யா (24). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. 

இந்த குழந்தைகளை பராமரிப்பதற்காக ஐஸ்வர்யாவின் தாய் சாந்தி (45) மதுரையில் இருந்து கோவைக்கு வந்தார். அவர் தனது பேரக் குழந்தைகளை கவனித்து வந்தார். கடந்த 21-ந் தேதி ஐஸ்வர்யா மருந்து வாங்குவதற்காக வெளியே சென்றார். 

பேரனை கொன்ற பாட்டி 

அவர், திரும்பி வந்தபோது அவருடைய 2 குழந்தைகளும் காயத்துடன் காணப்பட்டன. இதை பார்த்து பதறிய ஐஸ்வர்யா குழந்தைகளை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். 

அங்கு குழந்தைகளை பரிசோதித்த டாக்டர், ஆண்குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  
இதுகுறித்த புகாரின்பேரில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அதில் பேரக்குழந்தைகளை அள்ளிக் கொஞ்ச வேண்டிய பாட்டியே, இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. 

தேடுதல் வேட்டை

இதற்கிடையே சாந்தி தலைமறைவானார். அவருடைய கணவர், மதுரையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே சாந்தியை கைது செய்ய இன்ஸ்பெக்டர் ஞான சேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

சாந்தி மதுரையில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் மதுரைக்கு விரைந்தனர். அவர்கள், மதுரையில் முகாமிட்டு பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

மதுரையில் கைது 

இந்த நிலையில் சாந்தி மதுரையில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த வீட்டிற்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த சாந்தியை கைது செய்தனர். 

பின்னர் அவரை போலீசார் கோவைக்கு காரில் அழைத்து வந்தனர். இது குறித்து போலீசார் கூறும் போது, கைதான சாந்தியிடம் விசாரணை நடத்திய பிறகே அவர் எதற்காக பேரனை கொலை செய்தார் என்பது தெரிய வரும் என்றனர்.  

1 More update

Next Story