குவிந்து கிடக்கும் குப்பைகள்
ஊட்டி நொண்டிமேடு, தலையாட்டுமந்து பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒருமுறை குப்பைகளை சேகரிக்க வாகனங்கள் வருகின்றன. இதனால் வீடுகள், கடைகளில் சேகரமாகும் குப்பைகளை பிரித்து கொடுக்க முடியாமல் பொதுமக்கள் திறந்தவெளியில் கொட்டும் நிலைமை இதனால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. எனவே, குப்பைகளை முறையாக சேகரிக்க வேண்டும். |
கடும் தூர்நாற்றம்
ஊட்டி மார்க்கெட் பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடுகிறது. பலத்த மழையின் போது தண்ணீருடன் கலந்து ஓடுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே, கழிவுநீர் வழிந்து ஓடுவதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். |
பள்ளி கழிவறை பராமரிக்கப்படுமா?
துடியலூர் அருகில் உள்ள என்.ஜி.ஜி. காலனியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகிறார்கள். கொரோனா காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளி வருகிற 1-ந் தேதி முதல் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பள்ளியில் கழிவறை உரிய பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. இதனால் திறந்தவெளியை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே கழிவறையை சரிசெய்ய வேண்டும். |
நிரம்பி வழியும் குப்பை தொட்டி
கோவை விளாஙகுறிச்சி கூட்டுறவு காலனியில் குப்பைகள் போட குப்பை தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவை நிரம்பி வழிந்த பின்னரும், குப்பைகள் அகற்றப்படாததால் அங்கு திரியும் தெருநாய்கள் குப்பைகளை சாலையில் இழுத்து போடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். |
நரசிம்மன், விளாங்குறிச்சி. |
பழுதடைந்த சாலை
கோவை டைடல் பார்க் முதல் விளாங்குறிச்சி வரை உள்ள சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயத்துடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அந்த சாலையை சரிசெய்ய வேண்டும். |
தெருநாய்கள் தொல்லை
கோவை சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள இந்திராகாந்தி கிழக்கு வீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கூட்டங் கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள், குப்பைகளை வீதிக்கு இழுத்து வந்து போடுவதுடன், நடந்து செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். |
நாகராஜ், சீரநாயக்கன்பாளையம். |
பிச்சை எடுப்பது அதிகரிப்பு
கோவை தடாகம் ரோட்டில் உள்ள வடவள்ளி பிரிவில் இருக்கும் சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது அதிகரித்து வருகிறது. இதற்காக குழந்தைகள் கடத்தப்பட்டு வருகிறதா என்பது தெரியவில்லை. சிக்னலில் வாகனங்கள் நிற்கும்போது குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதுடன் சிலர் தொந்தரவும் செய்து வருகிறார்கள். எனவே போலீசார் இதை கண்காணித்து பிச்சை எடுத்து வருபவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும். |
போக்குவரத்துக்கு இடையூறு
கோவை கணபதியில் இருந்து ரத்தினபுரிக்கு செல்லும் சாலையில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் அடியில் உள்ள சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். |
கார்த்தீபன், நல்லாம்பாளையம். |
குண்டும் குழியுமான சாலை
கோவை திருச்சி ரோட்டில் மேம்பால இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. மேம்பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள சாலை மழை காரணமாக குண்டும் குழியுமாக படுமோசமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே இந்த சாலையை சரிசெய்ய வேண்டும். |
விபத்தை தடுக்க வேகத்தடைகள்
பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி 4-வது வார்டு பகுதியில் உள்ள சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் வேகத்தில் செல்வதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து விபத்தை தடுக்க ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்க வேண்டும். |
நாகமாணிக்கம், பொள்ளாச்சி. |
பழுதான அரசு மருத்துவமனை
சுல்தான்பேட்டை அருகே உள்ள பூராண்டம்பாளையம் ஊராட்சியில் தாய்சேய் நல ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் கீழே விழக்கூடிய வகையில் இருக்கிறது. இந்த ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருவதால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான கட்டிடத்தை சரிசெய்ய வேண்டும். |
கண்ணன், பூராண்டம்பாளையம். |
நிரம்பி வழியும் கழிவுநீர்
கோவை மாநகராட்சி 42-வது வார்டுக்கு உட்பட்ட உடையாம் பாளையம் பார்க் டவுன் 5-வது வீதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் கழிவுநீர் நிரம்பி வழிகிறது. சில இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. இதனால் இங்கு தொற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை சரிசெய்ய வேண்டும். |
கே.ராஜகோபால், உடையாம்பாளையம். |
ஒளிரான தெருவிளக்குகள்
கேகாவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதில் பல விளக்குகள் பழுதானதால் ஒளிராமல் இருக்கிறது. இதனால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், நகை பறிக்கும் சம்பவங்கள் அதிகளவில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பழுதான விளக்குகளை சரிசெய்து அவற்றை ஒளிர வைக்க வேண்டும். |
சங்கர், எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி. |