வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்
வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்
கோவை
வருகிற 1-ந் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதால் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததால் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. அதுபோன்று கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.
தொடர்ந்து தொற்று பரவல் குறைந்து வருவதால் வருகிற 1-ந் தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க உத்தரவிடப் பட்டு உள்ளது. இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மேலும் கழிப்பறைகள், குடிநீர் தொட்டி மற்றும் மைதானங்களும் சுத்தப்படுத்தப்படுகிறது.
இதேபோல் மாணவ- மாணவிகள் அமரும் இருக்கைகள் போன்ற வற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் வகுப்பறை யில் உள்ள தூசிகள், ஒட்டடைகள் அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி கீதா கூறியதாவது:-
2,064 பள்ளிகள்
கோவை மாவட்டத்தில் 1 முதல் 8 வரை வகுப்புகள் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேசன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என மொத்தம் 2,064 பள்ளிகள் வருகிற 1-ந் தேதி முதல் திறக்கப்படுகின்றன.
அந்த பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை 3 லட்சத்து 90 ஆயிரத்து 365 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுடன் மேல்நிலை வகுப்பு மாணவர்களும் சேர்த்து மொத்தமாக 5 லட்சத்து 70 ஆயிரத்து 508 பேர் பள்ளிக்கு வர தயாராக உள்ளனர்.
மாணவ-மாணவிகள் அதிகம் உள்ள பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story