போலீஸ் போல நடித்து மூதாட்டியிடம் 11 பவுன் நகை பறிப்பு


போலீஸ் போல நடித்து மூதாட்டியிடம்  11 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 24 Oct 2021 7:19 PM GMT (Updated: 24 Oct 2021 7:19 PM GMT)

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே போலீஸ் போல நடித்து மூதாட்டியிடம் 11 பவுன் நகை பறித்த 2 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை,

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே போலீஸ் போல நடித்து மூதாட்டியிடம் 11 பவுன் நகை பறித்த 2 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

போலீஸ் போல நடித்து...

மதுரை புதூர் சம்பக்குளம் முதல் தெருவை சேர்ந்தவர் குளோரி (வயது 63). இவரது அக்காள் சர்வேயர் காலனியில் வசித்து வருகிறார். அவரது பேத்தி விஷேசத்திற்காக குளோரி வீட்டில் இருந்து நடந்து சென்றார். அப்போது அழகர்கோவில் மெயின்ரோட்டில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அருகே டிப்-டாப் உடையணிந்த 2 பேர் நின்று கொண்டிருந்தனர். 
அவர்களில் ஒருவர் குளோரியை தடுத்து நிறுத்தி உங்களை அதிகாரி பார்க்க வேண்டும் என்று கூறுகிறார் என்று தெரிவித்தார். அவர்களை பார்க்க போலீஸ் போல் இருந்ததால் அவர்கள் அருகே குளோரி சென்றுள்ளார். அப்போது அவர் இந்த பகுதியில் நகை பறிப்பு சம்பவம் அதிகம் நடக்கிறது. நீங்கள் இவ்வளவு நகையை அணிந்து செல்கிறார்கள். அதனை கழற்றி கொடுங்கள் என்று கூறியுள்ளார். உடனே அவரும் தான் அணிந்திருந்த தங்க சங்கிலி, வளையல் என 11 பவுன் நகையை கழற்றி அவரிடம் கொடுத்தார். அதனை பெற்று கொண்ட அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டனர்.

2 பேருக்கு வலைவீச்சு

இதனால் அவர் திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். பின்னர் குளோரி தனது அக்காள் வீட்டிற்கு சென்று அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவங்களை தெரிவித்தார். அதன்பின்னர் அவர் திருப்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  நகையை பறித்த 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
----

Next Story