அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை 20 ஏக்கர் நெல் பயிர் தண்ணீரில் மூழ்கி நாசம்
அம்மாபேட்டை பகுதியில் பெய்த பலத்த மழையால் 20 ஏக்கர் நெல் பயிர் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்தது.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை பகுதியில் பெய்த பலத்த மழையால் 20 ஏக்கர் நெல் பயிர் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்தது.
நெல் பயிர் சேதம்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அனைத்து இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து 3 நாட்களாக இரவில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகல் முழுவதும் வெயில் கொளுத்தியது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணி அளவில் அம்மாபேட்டை அடுத்துள்ள குறிச்சி வயக்காடு பகுதியில் மழை பெய்ய தொடங்கியது. இரவு 9 மணி வரை பலத்த மழை பெய்தது.
இதேபோல் சித்தார், பூனாச்சி, நத்தமேடு, அய்யந்தோட்டம், சீலம்பட்டி, கூச்சிக்கல்லூர், ராமாச்சிபாளையம், சுப்பராயன்கொட்டாய், செல்லிக்கவுண்டனூர் ஆகிய பகுதிகளிலும் மழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதியில் தண்ணீர் புகுந்து தேங்கி நின்றது. சுமார் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான நெல் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. சில வயல்களில் பயிரே தெரியாத அளவுக்கு குளம்போல் தண்ணீர் நிற்கிறது. நெல் வயல் மட்டுமின்றி 1 ஏக்கர் பரப்பளவிலான சோளபயிர்கள், தட்டைப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்தன. கரும்பு தோட்டத்துக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் கரும்பு பயிர் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கோரிக்கை
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘ஒவ்வொரு முறையும் மழைக் காலங்களில் இவ்வாறு தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதமடைகின்றன. ரோடு உயரமாக இருப்பதால் மழை தண்ணீர் வயலில் புகுந்து வருகிறது. எனவே மழைநீர் வெளியேற குறிச்சி சமத்துவபுரம் முதல் அந்தியூர் மெயின்ரோடு வரை ரோட்டின் ஓரத்திலும், குறுக்கேயும் வடிகால் அமைத்து தண்ணீர் விளை நிலங்களுக்குள் புகாதவாறு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் தற்போது சேதமடைந்துள்ள பயிருக்கு இழப்பீடு வழங்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story