திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி- 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரியால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரியால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பழுதான லாரி
தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இது தமிழகம்-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கும், அங்கிருந்து தமிழகத்துக்கும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
திருச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு சிமெண்டு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதை 9-வது கொண்டை ஊசி வளைவில் காலை 10 மணி அளவில் சென்றபோது நடுரோட்டில் பழுதாகி லாரி நின்றது.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் அந்த வழியாக சிறிய வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. தமிழகத்தில் இருந்து சென்ற வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியிலும், கர்நாடகத்தில் இருந்து வந்த வாகனங்கள் ஆசனூர் சோதனைச்சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கும் பணி நடந்தது. மதியம் 1 மணி அளவில் லாரி மீட்கப்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து நிலைமை சீராகியது. மற்ற வாகனங்கள் அங்கிருந்து சென்றன. இதனால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமும் தொடரும் போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story