ஒற்றை நெல் நடவு முறையில் அதிக மகசூல்- வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
ஒற்றை நடவு முறையில் நெல் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் சி.சின்னசாமி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு
ஒற்றை நடவு முறையில் நெல் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் சி.சின்னசாமி தெரிவித்து உள்ளார்.
செம்மை நெல் சாகுபடி
ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சி.சின்னசாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் செம்மை நெல் சாகுபடி என்னும் ஒற்றை நாற்று நடவு முறையில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த முறையில் இளம் நாற்றை நடுவதால் சடுதியில் நிலை கொண்டு நன்கு வளர்கின்றது. இதனால் வேர்களின் வளர்ச்சி அதிகமாகிறது. அதிக தூர்கள் வெடிக்கின்றன. இலைகள் அறுவடை வரை பசுமையாக இருப்பதால் சூரிய ஒளிச்சேர்க்கை கடைசி வரை நன்றாக இருக்கிறது. மிகவும் எளிமையான, சிக்கனமான இந்த தொழில்நுட்பத்தால் ஏக்கருக்கு குறைந்தது 500 கிலோ கூடுதல் மகசூல் கிடைக்கிறது.
செம்மை நெல் சாகுபடிக்கு குறைந்த அளவு நெல் விதைகள் போதுமானது. ஒரு ஏக்கருக்கு 2 கிலோ முதல் 3 கிலோ விதைகள் தேவைப்படுகிறது. நாற்றங்கால் நீர் நிலைக்கும் நடவு வயலுக்கும் அருகில் இருப்பது நல்லது. ஒரு ஏக்கர் பரப்பளவில் நாற்றுகள் நடவு செய்ய ஒரு சென்ட் பரப்பளவு நிலம் போதுமானதாகும். உழுது சமன்படுத்தப்பட்ட நிலம் 4 அடி அகல பாத்திகளாக 1½ அடி இடைவெளியில் அமைக்க வேண்டும். வயல்களில் களிமண் விகிதம் அதிக அளவில் இருந்தால் மணல் கலக்கலாம். தேவையான அளவு மண்ணுடன் 20 சதவீத நன்கு மக்கிய தொழு உரம், 10 சதவீத தவிடு, 1½ கிலோ பொடியாக்கப்பட்ட டை-அமோனியம் பாஸ்பேட் அல்லது 2 கிலோ 17:17:17 காம்பளக்ஸ் உரத்துடன் கலந்து நாற்றங்கால் அமைக்கும் இடத்தின் மீது பரப்பி நாற்று பாத்திகளை அமைக்க வேண்டும்.
நாற்று நடவு
விதையை ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து வடிகட்டி ஒரு நாள் நிழலில் வைக்க வேண்டும். பிறகு முளை கட்டிய விதையை சீராக தூவி விடவேண்டும். நெல் விதை மீது சீராக மணல் அல்லது தொழு உரத்துடன் கலந்த மண்ணை தூவிய பிறகு தண்ணீர் தெளிக்க வேண்டும். அதிக வெயிலில் இருந்து நாற்றை பாதுகாக்க நாற்றங்காலை வைக்கோல் மூலம் மூடி வைப்பது நல்லது. இவ்வாறு நாற்றங்காலில் வளர்க்கும்போது 14 முதல் 15 நாட்களில் நடவு செய்வதற்கு ஏற்ற வகையில் நாற்றுகள் வளர்ந்து நிற்கும்.
ஒரே ஒரு நாற்றை எடுத்து மண்ணின் மேற்பரப்பில் மேலாக நடவு செய்ய வேண்டும். 10 அங்குலத்திற்கு 10 அங்குலம் இடைவெளியில் நடவு செய்யலாம். நாற்றுகளை பாத்திகளில் இருந்து பறித்த 30 நிமிடங்களில் நடவு செய்யப்பட வேண்டும். நாற்றுக்களை ‘அசோஸ்பைரில்லம்’ மற்றும் ‘சூடோமோனாஸ் புரசன்ஸ்’ கலவையில் வேரை நன்கு 20 நிமிடம் நனைத்து பின்னர் நடவு செய்ய வேண்டும்.
நீர் மேலாண்மை
மண் மறைய நீர் கட்டுதல் வேண்டும். இதையே பயிர் பருவம் வரை பின்பற்றப்பட வேண்டும். நடவு செய்த 10, 20, 30, 40 ஆகிய நாட்களில் அதாவது 10 நாட்கள் இடைவெளியில் ‘கோனோவீடர்’ என்னும் களைக்கருவி உருளை மூலம் வயலில் முன்னும் பின்னும் உருட்ட வேண்டும். அவ்வாறு செய்வதால் வேர்களில் காற்றோட்டம் அதிகரித்து அதிக எண்ணிக்கையில் தூர்கள் உருவாகிறது. மேலும் தூர்கள் அனைத்தில் இருந்தும் ஒரே நேரத்தில் திடமான கதிர் வெளிவருகின்றன. அதனால் பதர்கள் இல்லாத நல்ல எடை உள்ள திரட்சியான நெல் மணிகள் உருவாகி அதிக மகசூல் கிடைக்கிறது.
இந்த முறையில் அதிக காற்றோட்டமும், வெளிச்சமும் பயிர்களுக்கு கிடைப்பதால் எலித்தொல்லை குறைவதுடன் பூச்சி நோய் தாக்குதலும் குறைந்து சாகுபடி செலவும் கட்டுப்படுகிறது. மேலும் செம்மை நெல் சாகுபடியானது அனைத்து பருவங்களுக்கும், தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து ரகங்களுக்கும் ஏற்றது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சி.சின்னசாமி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story