கறிக்கோழி கொள்முதல் விலை உயருமா
கறிக்கோழி கொள்முதல் விலை உயருமா
பொள்ளாச்சி
கறிக்கோழி கொள்முதல் விலை உயருமா? என்கிற எதிர்பார்ப்பில் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
கறிக்கோழி பண்ணைகள்
தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணைகளில் தினமும் சராசரியாக 12 லட்சம் கறிக்கோழி வரை உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா கர்நாடகா,புதுச்சேரி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
விலை குறைந்தது
கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில், தினமும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த விலையானது கறிக்கோழி நுகர்வு ஏற்றம் மற்றும் இறக்கத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது, ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு சராசரியாக ரூ.100 செலவாகிறது. இந்த நிலையில், கடந்த 20-ந்தேதி ரூ.107 ஆக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (விற்பனை விலை, உயிருடன்) தற்போது ரூ.95 ஆக குறைந்து உள்ளது. இந்த நிலையில் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை உயருமா? என்கிற எதிர்பார்ப்பில் உற்பத்தியாளர்கள் உள்ளனர்
எதிர்பார்ப்பு
இதுகுறித்து உற்பத்தியாளர்கள் கூறுகையில், புரட்டாசி மாதம் பெரும்பாலான இந்துக்கள் அசைவம் நுகர்வதை தவிர்ப்பதால் கறிக்கோழி நுகர்வு சரிந்து கொள்முதல் விலையும் உற்பத்தி செலவைவிட குறைந்து காணப்படும். ஆனால் கடந்த புரட்டாசி மாதத்தில் நுகர்வில் பெரிய அளவில் மாற்றம் இல்லாததால் கொள்முதல் விலை குறையவில்லை. இதனால்,உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைத்துவந்தது.ஆனால், ஐப்பசி மாதம் எப்போதும் விலை உயர்வு காணப்படும். ஆனால் நடப்பாண்டில் தற்போது ஐப்பசி மாதம் பிறந்து ஒரு வாரம் ஆகியும் பண்ணை கொள்முதல் விலை உயரவில்லை.
மாறாக தற்போது கிலோவிற்கு ரூ.5 நஷ்டம் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இறைச்சி் கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு ஒரு சில தினங்கள் முன்பு கறிக்கோழிக்கு கிராக்கி ஏற்பட்டு பண்ணை கொள்முதல் விலை உயரலாம் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story