சத்தியமங்கலம் கூட்டுறவு வங்கியில் போலி ரசீது கொடுத்து ரூ.4 கோடி மோசடி இறப்பதற்குள் பணத்தை பெற்று தாருங்கள் என்று கலெக்டரிடம் மனு


சத்தியமங்கலம் கூட்டுறவு வங்கியில் போலி ரசீது கொடுத்து ரூ.4 கோடி மோசடி இறப்பதற்குள் பணத்தை பெற்று தாருங்கள் என்று கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 25 Oct 2021 10:42 PM IST (Updated: 25 Oct 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் கூட்டுறவு வங்கியில் போலி ரசீது கொடுத்து ரூ.4 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், நாங்கள் இறப்பதற்குள் பணத்தை பெற்று தாருங்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம், நயம்பாடி, அவலூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் கடந்த 2019-ம் ஆண்டு செஞ்சி அருகே சத்தியமங்கலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நிரந்தர வைப்பு தொகை செலுத்தினோம். இதில்  150-க்கும் மேற்பட்டோர்,  ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அவரவரர் வங்கி கணக்கில் செலுத்தினோம்.

இதற்கிடையே, எங்களிடம் வைப்பு தொகையை பெற்ற வங்கி செயலாளர் கடந்த மே மாதம் திடீரென இறந்துவிட்டார். இதன் பின்னர் நாங்கள், எங்கள் வைப்பு தொகைக்கான ரசீதை கொண்டு சென்று அந்த வங்கியில் காண்பித்து பணத்தை கேட்டபோது அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள், நீங்கள் சொல்வதாக கூறும் இத்தொகை வங்கி கணக்குகளில் வரவில்லை என்றும், இந்த ரசீது போலியானது என்றும் கூறிவிட்டனர்.

ரூ.4 கோடி மோசடி

 எங்களிடம் பணத்தை பெற்று போலி ரசீது கொடுத்து ரூ.4 கோடி வரை மோசடி செய்துவிட்டனர். எனவே இதுகுறித்து தாங்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து நாங்கள் வங்கியில் செலுத்தி இருந்த எங்கள் பணத்தை திருப்பி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஏற்கனவே இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்துவிட்டோம். ஆனால் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். 

வங்கியில் பணம் செலுத்திய பலர், பல்வேறு வகையான நோயால் பாதிக்கட்டவர்கள், எனவே  நாங்கள் இறப்பதற்குள் எங்கள் பணத்தை மீட்டு தாருங்கள். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மனுவை பெற்ற, கலெக்டர் மோகன், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

Next Story