கோவை கரூர் புறவழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் விவசாயிகள் மனு
கோவை கரூர் புறவழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் விவசாயிகள் மனு
கோவை
விவசாய நிலம் பாதிக்கும் என்பதால் கோவை- கரூர் புறவழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாயிகள் பாதுகாப்பு குழுவினர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
குறை தீர்க்கும் கூட்டம்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.
அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கொங்கு மண்டல விவசாயிகள் பாதுகாப்பு குழுவினர் கலெக்டரிடம் அளித்த மனுவில், கரூர் முதல் கோவை வரை 6 வழி பசுமை சாலை திட்டம் மற்றும் அதனுடன் இணைந்த எட்டிமடை, அரிசிபாளையம், கலங்கல், குன்னத்தூர், நரசிம்மநாயக்கன்பாளையம் வழியாக அமைக்க முடிவு செய்யப்பட்ட கோவை கிழக்கு புறவழிச் சாலைத் திட்டத்தால் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறியிருந்தது.
ஆம்புலன்சில் வந்து மூதாட்டி மனு
கோவையை அடுத்த பன்னிமடையை சேர்ந்தவர் சரோஜினி (வயது 70). உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள இவர் கலெக்டர் அலுவலகத்திற்கு ஆம்புலன்சில் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவருக்கு பாத்தியப்பட்ட வீட்டை எனது மூத்த 2 மகள்கள் ஆக்கிரமித்து கொண்டனர். மேலும் என்னிடமிருந்து 17 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் பணத்தையும் வாங்கிக்கொண்டு என்னை துரத்தி விட்டனர். இது குறித்து ஆர்.டி.ஓ.விடம் புகார் அளித்தேன்.
அதன்படி எனது இரு மகள்களும் மாதந்தோறும் ரூ.1,500 கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். எனவே எனது பணம், நகையை மீட்டு தருவதோடு, எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விற்பனைக்கு அனுமதி
காளப்பட்டி பகுதி பூங்கா நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில் சிறிய அளவிலான விமான மாதிரியை கையில் ஏந்தியவாறு வந்து மனு அளித்தனர். அதில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வீட்டுமனைகள் தவணைத் திட்டத்தில் வழங்கப்பட்டது.
தற்போது இந்த மனை களை விற்பனை செய்யக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இந்த உத்தரவுக்கு தடை விதித்து அந்த இடங்களில் விற்பனை மற்றும் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தது.
ஆவாரம்பாளையத்தை சேர்ந்த லட்சுமி என்ற மூதாட்டி அளித்த மனுவில், கடந்த 21 ஆண்டுகளாக விதவை உதவித் தொகை பெற்று வரும் எனக்கு கடந்த 3 மாதங்களாக உதவித்தொகை நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே மீண்டும் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தது.
Related Tags :
Next Story