இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசிய மேலாளர் மீது தாக்குதல்


இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசிய மேலாளர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 25 Oct 2021 11:05 PM IST (Updated: 25 Oct 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசிய மேலாளர் மீது தாக்குதல்

காரமடை

காரமடை அருகே இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசிய மேலாளர் சரமாரியாக தாக்கப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

இளம்பெண் 

கோவை மாவட்டம் காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு காரமடையை சேர்ந்த திருமணமான 25 வயது இளம்பெண் வேலை செய்து வருகிறார். 

இந்த பெட்ரோல் பங்க்கில் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 50 வயதான நபர் மேலாளராக உள்ளார். இவர் கடந்த சில நாட்களாக அந்த இளம்பெண்ணின் செல்போனுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். 

ஆபாசமாக பேசினார் 

இதை பார்த்த அவர், மேலாளரை கண்டித்து உள்ளார். இருந்த போதிலும் அவர் தொடர்ந்து இளம்பெண்ணுக்கு செல்போனில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரத்தில் அந்த இளம்பெண்ணின் செல்போனுக்கு மேலாளர் தொடர்பு கொண்டார். 

அப்போது பேசிய அவர், வீட்டில் நீ தனியாக இருக்கிறாயா?, கணவர் உடன் இருக்கிறாரா?, அவர் இல்லை என்றால் நான் உன் வீட்டிற்கு வரலாமா? என்று பேசிய அவர், தொடர்ந்து ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி உள்ளார். இதனால் அவர் மேலாளரின் இணைப்பை துண்டித்துவிட்டார். 

சரமாரி தாக்குதல் 

மேலும் அவர் மேலாளர் பேசம்போது அந்த ஆடியோவை செல் போனில் பதிவும் செய்து கொண்டார். பிறகு கணவர் வீட்டிற்கு வந்ததும் அதை அவரிடம் போட்டுக்காட்டி கதறி அழுதார். இதில் ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் கணவர் தனது உறவினர்களுடன் அந்த பெட்ரோல் பங்குக்கு சென்றார். 

பின்னர் அங்கு இருந்த அந்த மேலாளரை சரமாரியாக அவர்கள் தாக்கினார்கள். உடனே அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை தடுத்தாலும், அவரை விடாமல் தரதரவென வெளியே இழுத்து வந்து சரமாரியாக தாக்கிவிட்டு சென்றனர். 

வைரலாக பரவுகிறது 

இதற்கிடையே இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்களின் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story