கோபி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
கோபி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
ஈரோடு
கோபி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
டாஸ்மாக் கடை
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக கொடுத்தனர்.
கோபி கருக்கம்பாளி, கரட்டூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த கோரிக்கை மனுவில் கூறி இருந்ததாவது:-
கருக்கம்பாளி-கரட்டூர் ரோட்டில் அரசு சார்பில் டாஸ்மாக் கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த ரோட்டில் தனியார் பள்ளிக்கூடம், பனியன் நிறுவனம், ஸ்பின்னிங் மில், கீழ்பவானி வாய்க்கால், பாசன விளைநிலங்கள் உள்ளன. பள்ளிக்கூடத்திற்கு செல்லும் மாணவ -மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் இந்த வழியாகத்தான் சென்று வருகிறார்கள். எனவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தால் பெண்கள் மற்றும் மாணவ -மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இருக்காது. எனவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் பணியை அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
ரூ.5 ஆயிரம் நிவாரணம்
ஈரோடு ஆயப்பாளி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எல்லப்பாளையம், ஆயப்பாளி, அம்மன் நகர், முல்லை நகர், சக்தி நகர், பசும்பொன் நகர், மாமரத்துப்பாளையம் ஆகிய பகுதிகளை இணைக்கும் தார் ரோடு மற்றும் நரிப்பள்ளம் -கங்காபுரம் இணைப்பு சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது அந்த சாலை குண்டும் -குழியுமாக காணப்படுகிறது.
இந்த சாலையில் பயணிப்பதால் முதுகுவலி, இடுப்புவலி, தண்டுவட பாதிப்புகளால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே எங்கள் பகுதியில் தார் ரோடு போட வேண்டும். அல்லது மருத்துவ சிகிச்சை பெற ரேஷன் கார்டு தாரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்’ இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
249 மனுக்கள்
இதேபோல் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் வழங்கி இருந்தனர். மொத்தம் 249 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி மீனாட்சி, மாவட்ட வழங்கல் அதிகாரி இலாஹிஜான் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story