உத்திரமேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
உத்திரமேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.
உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கத்தை அடுத்த எடமச்சி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 36) விவசாயி. ஆடுகளும் வளர்த்து வருகிறார். இவரது மனைவி சுமதி (32). இவர் நேற்று காலை தேசிய ஊரக வேலை திட்டப்பணிக்கு சென்றுவிட்டார். பத்மநாபன் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு உடல் நலக்குறைவாக இருந்த ஆடுகளை சாலவாக்கம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். மதியம் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகை, அங்கு இருந்த இரும்பு பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.25 ஆயிரம் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகனுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் ஆய்வு செய்தனர்.
மேலும் கைரேகை நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர். பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story