காஞ்சீபுரம் அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த 4 கற்சிற்பங்கள் கண்டெடுப்பு
காஞ்சீபுரம் அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த 4 கற்சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த உள்ளாவூர் அருகே தீப்பாஞ்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 50 ஆண்டுகளாக வழிபாடு இல்லாமல் புதர்மண்டி பழுதடைந்து காணப்பட்டது. இந்த கோவிலுக்கு அந்த பகுதி இளைஞர்கள், செல்லும்போது அங்கு கற்சிற்பங்கள் இருப்பதை கண்டனர். இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வரலாற்று ஆய்வு மையத்தினர் தீப்பாஞ்சி அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு புதையுண்டு இருந்த 4 பழங்கால கற்சிற்பங்களை கண்டெடுத்தனர்.
இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறுகையில்:-
பழமை வாய்ந்த தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் சதிகல் எனப்படும் இந்த கல்லை வைத்து மக்கள் வழிபட்டுள்ளனர்.
போரில் வீர மரணம் அடைந்த கணவரின் உடலோடு, அவனது மனைவி தீ மூட்டி, உயிரை மாய்க்க உடன் கட்டை ஏறும் நிகழ்வுக்கு சதி என்று பெயர். மரணத்தை தழுவிய கணவன், மனைவியின் நினைவை போற்றும் வகையில் அவர்களது உருவங்களை சிற்பமாக செதுக்கி வழிபடுவர். இதற்கு. ‘சதி கல்' என்று பெயர். தற்போது கண்டெடுக்கப்பட்ட ஒன்றரை அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்டதாக உள்ள 3 சதி கற்களில் கணவன் மனைவி உருவம் காணப்பட்டது.
ஒன்றரை அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட மற்றொரு சதிகல்லில் ஒரு குறுநில மன்னன் அவரது 3 மனைவிகளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் அனைத்தும் கி.பி. 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர மன்னர்கள் ஆட்சி காலத்தை சேர்ந்தவை என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story