ரெயிலில் கடத்தி வரப்பட்ட 23½ கிலோ கஞ்சா பறிமுதல்
ரெயிலில் கடத்தி வரப்பட்ட 23½ கிலோ கஞ்சா பறிமுதல்
கோவை
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் ஆலாப்புழாவிற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தன்பாத்தில் இருந்து புறப்பட்டு கோவை ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை வந்தது. இந்த ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர், கோவை ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மினுக்கு தகவல் கொடுத்தார். மேலும் ரெயிலில் சோதனை மேற்கொண்டு கஞ்சாவை பறிமுதல் செய்யும் படி அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து ரெயில்வே போலீசார் துணை சூப்பிரண்டு யாஸ்மின் தலைமையில், அந்த ரெயிலுக்கு விரைந்து சென்றனர். பின்னர் ஒவ்வொரு பெட்டியாக ஏறி சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் முன்பதிவு செய்யப்பட்ட (எஸ்-4) பெட்டியில் ஒரு இருக்கைக்கு அடிப்பகுதியில் சிறிய சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. அதனை போலீசார் பிரித்து பார்த்தனர். அதில் சிறு, சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதில் மொத்தம் 7 கிலோ கஞ்சா இருந்தது. இதேபோல் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றொரு பகுதி ரெயில் பெட்டியில் சோதனை நடத்திய போது, அங்கிருந்த இருக்கைக்கு அடியில் 2 மூட்டைகள் காணப்பட்டன.
அதனை பிரித்த போது 16½ கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்தது யார், எங்கிருந்து கடத்தி வந்தார்கள், எங்கு கொண்டு செல்கிறார்கள், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story