போலீஸ் குடியிருப்பில் நகை-பணம் திருட்டு


போலீஸ் குடியிருப்பில் நகை-பணம் திருட்டு
x
போலீஸ் குடியிருப்பில் நகை-பணம் திருட்டு
தினத்தந்தி 26 Oct 2021 9:37 PM IST (Updated: 26 Oct 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் குடியிருப்பில் நகை-பணம் திருட்டு

கோவை

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் நகீனா. கோவை மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிகிறார். இவர் கோவை பி.ஆர்.எஸ். போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் (ஆர்-3 பிரிவு) உள்ள ஒரு வீட்டில் குடியிருந்து வருகிறார். கடந்த 22-ந் தேதி இவர்வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். 

பின்னர்  நேற்று காலை அவர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 தங்க மோதிரங்கள், ஒரு மடிக்கணினி, வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதேபோல் இவரது வீட்டிற்கு அருகே குடியிருப்பவர் மணிகண்டன். இவர் நக்சலைட் தடுப்பு பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அத்திக்கடவு முகாமிற்கு பணிக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் பணி முடிந்து அவர் நேற்று வீட்டிற்கு வந்து உள்ளார்.

 அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 1½ பவுன் தங்க செயின், 5 தங்க மோதிரங்கள், வெள்ளி பொருட்கள் ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. மேற்கண்ட 2 திருட்டு வழக்குகள் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த திருட்டு சம்பவம் நடைபெற்ற குடியிருப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதனை நன்கு தெரிந்து கொண்ட அந்த மர்ம  ஆசாமிகள், மிக சரியாக பூட்டிய வீட்டை மட்டும் குறிவைத்து திருடி சென்று உள்ளனர்.

கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். 

இந்த நிலையில் எப்போதும் போலீஸ் நடமாட்டம் இருக்கும் பி.ஆர்.எஸ். மைதானத்திற்குள் உள்ள  போலீஸ் வீடுகளில் திருட்டு  சம்பவம் நடந்தது பொதுமக்களிடம்  பீதியை கிளப்பி உள்ளது.
1 More update

Next Story