உளவியல் ரீதியாக மாணவர்களை தயார்படுத்த வேண்டும் ஆசிரியர்களுக்கு அறிவுரை


உளவியல் ரீதியாக மாணவர்களை தயார்படுத்த வேண்டும் ஆசிரியர்களுக்கு அறிவுரை
x
தினத்தந்தி 26 Oct 2021 10:12 PM IST (Updated: 26 Oct 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

உளவியல் ரீதியாக மாணவர்களை தயார்படுத்த வேண்டும் ஆசிரியர்களுக்கு அறிவுரை

பொள்ளாச்சி

நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் உளவியல் ரீதியாக மாணவ-மாணவிகளை தயார்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

ஆலோசனை கூட்டம்

கொரோனா பரவல் குறைந்து வருவதால் கடந்த மாதம் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் வருகிற 1-ந் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 

இந்த நிலையில் பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் பணி புரியும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கல்வி அதிகாரி ராஜசேகரன் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் கல்வி அதிகாரிகள் பேசும்போது கூறியதாவது:-

சுத்தமாக வைக்க வேண்டும்

பள்ளி வளாகம் சுத்தமாக இருக்க வேண்டும். பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, சமையலறை மற்றும் கழிப்பறைகள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் தேவைக்கு ஏற்ப போதுமான முகக்கவசம், சானிடைசர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

வகுப்பறைகள் குறைவாக இருந்தால் சுழற்சி முறையில் கற்றல் செயல்பாடுகள் நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நடமாடும் மருத்துவ குழு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செவிலியர் ஆகியோரின் தொலைபேசி எண்கள் பள்ளியின் அறிவிப்பு பலகையிலும், தலைமை ஆசிரியர் அறையிலும் எழுதப்பட்டு இருக்க வேண்டும். 

தயார்படுத்த வேண்டும்

நீண்ட இடைவெளிக்கு பிறகு மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கு பெறுவதால் அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். கொரோனா குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

வட்டார கல்வி அலுவலர் சின்னப்பராஜ், ஆசிரியர் பயிற்றுனர் (பொறுப்பு) ஸ்வப்னா, குறுவளமைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்துகொண்டனர்.


Next Story