புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 27 Oct 2021 2:07 AM IST (Updated: 27 Oct 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

மதுரை 
குண்டும், குழியுமான சாலை 
மதுரை வைக்கம் பெரியார் நகரில் உள்ள சாலையானது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-அயூப்கான், மதுரை. 
வீணாகும் குடிநீர் 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அச்சுகட்டு அருகில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மாதங்களாக குடிநீர் வீணாகி சாலையில் ஆறு போல ஓடுகிறது. எனவே, உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும். 
-ஆறுமுகம் சேதுராமன், திருப்பத்தூர். 
நாய்கள் தொல்லை 
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-பொதுமக்கள், பரமக்குடி. 
காணாமல் போன பெயர் பலகை  
விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டியபட்டி வழியாக மருளூத்து அருகே தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அங்கு வெறும் இரும்பு கம்பி மட்டுமே உள்ளது. பெயர் பலகையை காணவில்லை. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் ஊர் பெயர் தெரியாத நிலை ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-பாரதிராஜா, விருதுநகர். 
பழுதடைந்த கட்டிடம் 
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு உள்ளது. இந்த வார்டு கட்டிடத்தின் மேற்கூரை தற்போது பழுதடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிகிறது. இதனால் வார்டு பகுதியில் தரை முழுவதும் தண்ணீர் ஓடுவதால் நடந்து செல்லும் பொதுமக்கள் வழுக்கி விழும் சம்பவமும் நடக்கிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-மோகன், மதுரை. 
பள்ளத்தை மூடுவார்களா? 
விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் வத்திராயிருப்பு சாலையில் தம்பிபட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாயிலின் முன்பாக பள்ளம் காணப்படுகிறது. இவ்வழியாக செல்லும் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் குழிக்குள் தவறி விழும் அபாயம் உள்ளதால் அதனை மூடிட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
-மணிகண்டன், விருதுநகர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர் 
மதுரை வைகை தென்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். பாலம் தொடங்குமிடத்தின் இடதுபுறம் தடுப்புச்சுவர் உள்ளது. இதனை ஒட்டி உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. அதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. கொசுக்கடியால் பொதுமக்களுக்கு பல்வேறு மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே, தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும். 
-பாண்டி முத்தழகு, சிம்மக்கல்.

Next Story