தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகைகளை தயாரிக்க அனுமதி பெற வேண்டும்- மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி உத்தரவு


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகைகளை தயாரிக்க அனுமதி பெற வேண்டும்- மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி உத்தரவு
x
தினத்தந்தி 26 Oct 2021 9:21 PM GMT (Updated: 2021-10-27T02:51:17+05:30)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகைகளை தயாரிக்க அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தங்கவிக்னேஷ் உத்தரவிட்டு உள்ளார்.

ஈரோடு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகைகளை தயாரிக்க அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தங்கவிக்னேஷ் உத்தரவிட்டு உள்ளார்.
விழிப்புணர்வு கூட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைகளில் இனிப்பு வகைகள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், பல்வேறு இடங்களில் இனிப்பு வகைகள் மொத்தமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அங்கு பாதுகாப்பான முறையில் இனிப்புகளை உற்பத்தி செய்வதற்கான விழிப்புணர்வு கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரி தங்கவிக்னேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இனிப்பு வகைகளை பாதுகாப்பான முறையில் தயாரிக்க வேண்டும். கடந்த ஜனவரி மாதத்துக்கு பிறகு உற்பத்தி செய்த எண்ணெயை பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தாமல், புதிய எண்ணெயை பயன்படுத்த வேண்டும். கடை, குடோன், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இனிப்பு, கார வகைகள் தயாரிப்பதற்கு அனுமதி பெற வேண்டும்.
கொரோனா தடுப்பூசி
உணவு வகைகளில் கலர் பொடிகளை பயன்படுத்தக்கூடாது. தடை செய்யப்பட்ட மற்றும் கெட்டுப்போன பொருட்களை பண்டங்கள் தயாரிக்கும் அல்லது விற்பனை செய்யும் இடங்களில் வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே பணியாளர்களாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ஈரோடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் தங்கவேல், செயலாளர் முருகானந்தம் மற்றும் இனிப்பு, கார வகை தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story