சென்னிமலை முருகன் கோவிலுக்கு இரவு 8 மணி வரை செல்ல அனுமதிக்க வேண்டும்- பக்தர்கள் கோரிக்கை


சென்னிமலை முருகன் கோவிலுக்கு இரவு 8 மணி வரை செல்ல அனுமதிக்க வேண்டும்- பக்தர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 26 Oct 2021 9:21 PM GMT (Updated: 26 Oct 2021 9:21 PM GMT)

சென்னிமலை முருகன் கோவிலுக்கு இரவு 8 மணி வரை செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

சென்னிமலை
சென்னிமலை முருகன் கோவிலுக்கு இரவு 8 மணி வரை செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 
சென்னிமலை கோவில்
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் கொரோனா ஊரடங்கு காரணமாக சில மாதங்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
அதன்படி தற்போது தினமும் அதிகாலை 5.30 மணியில் இருந்து இரவு 7 மணி வரை மட்டும் அடிவாரத்தில் இருந்து தார்சாலை வழியாகவும், படிக்கட்டுகள் வழியாகவும் மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.
வேதனை
மேலும் இரவு 7.45 மணிக்கு மேல் கோவிலில் உள்ள பக்தர்களை கோவிலில் இருந்து அனுப்பிய பிறகு இரவு 8 மணி பூஜை கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த நிலையில், சமீபத்தில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு பெரும்பாலான கட்டுப்பாடுகளை தளர்வு செய்து அறிவித்த நிலையில் சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்ல தற்போதும் இரவு 7 மணிக்கு மேல் அனுமதிக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
நடவடிக்கை
இதுகுறித்து சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்.ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது.
சென்னிமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விசைத்தறி கூடங்களில் பணி புரியும் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களும் இரவு 8 மணி பூஜையில் கலந்து கொள்வார்கள்.
ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்ட பிறகும் இரவு 7 மணிக்கு மேல் முருகன் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுப்பதால் இரவு 8 மணி பூஜையில் யாரும் கலந்து கொள்ள முடியவில்லை.
எனவே வழக்கம் போல் இரவு 8 மணி வரை சென்னிமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story