சத்தியமங்கலத்தில் தொடர் மழை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது


சத்தியமங்கலத்தில் தொடர் மழை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 27 Oct 2021 3:32 AM IST (Updated: 27 Oct 2021 3:32 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலத்தில் தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.  
வீடு இடிந்து விழுந்தது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் வசித்து வருபவர் வேதமுத்து. அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் அவருடைய 3 மகன்களும் வீட்டை காலி செய்துவிட்டு வேறு பகுதிகளுக்கு குடியேறிவிட்டார்கள்.  
இந்தநிலையில் சத்தியமங்கலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு கன மழை பெய்தது. அப்போது 12 மணி அளவில் வேதமுத்துவின் வீடு திடீர் என இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. 
குடிநீர் தொட்டி சேதம்
இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகள் நடைபாதையிலேயே விழுந்து கிடந்ததால் நேற்று காலை அப்பகுதி மக்களே அதை அகற்றினார்கள். மேலும் இந்த வீட்டின் அருகிலேயே நகராட்சி சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி உள்ளது. அந்த தொட்டியின் மீது இடிபாடுகள் விழுந்து சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டார்கள். மேலும் இதுகுறித்து சத்தியமங்கலம் நகராட்சிக்கு தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அரியப்பம்பாளையத்தில் பெரியூர் செல்லும் வழியில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் ஒரு பெரிய மரத்தின் கிளை முறிந்து ரோட்டில் விழுந்தது. இதனால் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மரக்கிளையை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். 

Next Story