வாலிபரிடம் செல்போன், பணம் பறிப்பு - 2 பேர் கைது


வாலிபரிடம் செல்போன், பணம் பறிப்பு - 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Oct 2021 2:41 PM IST (Updated: 27 Oct 2021 2:41 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் வாலிபரிடம் செல்போன், பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் காயிதே மில்லத் தெருவை சேர்ந்தவர் மன்சூர் (வயது 29). இவர் நேற்று முன்தினம் மதியம் தனது மோட்டார் சைக்கிளில் ஊத்துக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். பெரியபாளையம்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை தும்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது செல்போனை பறிக்க முயன்றனர். 

இதனால் பயந்து போன மன்சூர் மோட்டார் சைக்கிளை சாலை ஓரமாக நிறுத்தினார். இதனால் அவர்கள் தங்களிடம் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மன்சூரை வெட்ட முயன்றனர். அப்போது அவர் ஒதுங்கி கொண்டார்.

இதில் மன்சூர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது மன்சூரின் பாக்கெட்டில் இருந்த ரூ.300 மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். இது குறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்று மன்சூர் உடனடியாக புகார் செய்தார். 

போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி உத்தரவின்பேரில் போலீசார் மர்மநபர்களின் மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் பெரியபாளையத்தை சேர்ந்த விஷ்வா (வயது 19) மற்றும் 18 வயதானவர் இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் செல்போன் மற்றும் ரொக்கப்பணத்தை கைப்பற்றினர்.

Next Story