தையல் தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்


தையல் தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 27 Oct 2021 8:11 PM IST (Updated: 27 Oct 2021 8:11 PM IST)
t-max-icont-min-icon

கோபியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தையல் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கோபியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தையல் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தையல் தொழிலாளி
ஈரோடு மாவட்டம் கோபி பெரியார் நகர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நடராஜ். இவருடைய மகன் பழனிச்சாமி (வயது 26). பழனிச்சாமியின் பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் அவர் தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்தார். அவர் கோபி புகழேந்தி வீதியில் உள்ள ஒரு தையல் கடையில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 13-3-2019 அன்று இரவு 9 மணி அளவில் பழனிச்சாமி கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு தம்பதியின் 5 வயது சிறுமி தனியாக கடையின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாள்.
பாலியல் அத்துமீறல்
அந்த சிறுமி மீது பழனிச்சாமி சபலம் அடைந்தார். எதிர்பாராத வகையில் அந்த சிறுமியை அவரது கடைக்குள் தூக்கிச்சென்ற அவர், கடையில் விளக்குகளை அணைத்துவிட்டு சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் செய்தார். அப்போது சிறுமியின் தாயார் வந்ததால், உடனடியாக சிறுமியை கடைக்கு வெளியே விட்டு விட்டார்.
இதுதொடர்பாக சிறுமியின் தாயார் கோபி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர். மேலும் அவர் மீது ஈரோடு மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
10 ஆண்டு ஜெயில்
வழக்கை நீதிபதி ஆர்.மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், 5 வயது சிறுமியை கடைக்குள் கடத்திச்சென்ற குற்றத்துக்காக 5 ஆண்டு ஜெயில், ரூ.1000 அபராதம், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றத்துக்காக பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் 5 ஆண்டு ஜெயில், ரூ.1000 அபராதம் என மொத்தம் 10 ஆண்டு ஜெயில் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி ஆர்.மாலதி உத்தரவிட்டார். இதனால் தையல் தொழிலாளி பழனிச்சாமிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ஒரு மாத காலத்தில் ரூ.50 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜர் ஆனார்.
1 More update

Next Story