சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.3½ லட்சம் மோசடி
சிங்கப்பூரில் ஆய்வக அதிகாரி வேலை வாங்கி தருவதாக கூறி ராமநாதபுரம் வாலிபரிடம் ரூ.3 லட்சத்து 43 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம்,
சிங்கப்பூரில் ஆய்வக அதிகாரி வேலை வாங்கி தருவதாக கூறி ராமநாதபுரம் வாலிபரிடம் ரூ.3 லட்சத்து 43 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வெளிநாட்டு வேலை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி உடையநாதபுரம் கோகுலம் தெரு பகுதியை சேர்ந்தவர் செல்லக்கண்ணு என்பவரின் மகன் கார்த்திக்ராஜா (வயது24). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆய்வக பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்பி அதுதொடர்பாக இணையதளத்தில் வேலைக்காக முயற்சி செய்துள்ளார்.அப்போது ஒரு இணைய தளத்தில் வெளிநாட்டு வேலை இருப்பதாக அறிவித்திருப்பதை அறிந்து அதில் விண்ணப்பித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கார்த்திக் ராஜாவை தொடர்பு கொண்ட மர்ம நபர் வெளிநாட்டில் நல்ல வேலை உள்ளதாகவும் அதற்கான அனைத்து தகுதிகளும், அனுபவமும் உங்களுக்கு இருப்பதாகவும் கூறி உள்ளனர். சிங்கப்பூரில் முதுநிலை ஆய்வக அதிகாரி பணியிடம் என்று கூறியதால் இதனை கேட்ட கார்த்திக் ராஜா எப்படியாவது அந்த வேலையை பெற்றுவிட வேண்டும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தால் வாழ்க்கையில் செட்டிலாகிவிட லாம் என்று ஆர்வம் அதிகரித்து உற்சாகமானார்.
ரூ.3½ லட்சம் மோசடி
இவரின் உற்சாகத்தை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் நேர்முக தேர்வு என கூறி நேரம் ஒதுக்கீடு செய்து ஆன்லைனில் நேர்முகத்தேர்வு நடத்தி உள்ளனர். இதில் கார்த்திக் ராஜா சிறப்பாக செயல்பட்டதாக கூறி உற்சாகமூட்டி உள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு, பாஸ்போர்ட்டு உறுதி தன்மை போன்ற செயல்பாட்டிற்காக பணம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர். மேலும், சிங்கப்பூர் தூதரக கட்டணம். விசா கட்டணம், சிங்கப்பூரில் எதாவது பாதிப்பு ஏற்பட்டால் உங்களின் குடும்பத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் காப்பீடு கட்டணம், உள்நுழைவு வரி கட்டணம் என பல்வேறு காரணங்களை கூறி பணம் கேட்டுள்ளனர்.
இதற்கான பணம் அடுத்தடுத்து செலுத்தியபோது அதற்கான ஒப்புகை மின்னஞ்சல் வந்ததால் ஏமாற்றப்படுகிறோம் என்பதை கார்த்திக் ராஜா உணரவில்லை.இவர்களின் பேச்சை நம்பிய கார்த்திக் ராஜா அவர்கள் தெரிவித்தபடி வங்கிகணக்கில் ரூ.3 லட்சத்து 43 ஆயிரம் செலுத்தி உள்ளார். இந்த பணத்தினை பெற்றுக்கொண்ட மர்ம நபர்கள் தொடர்ந்து பல காரணங்களை கூறி பணம் கேட்டுள்ளனர்.
புகார்
இதனால் அவர்கள் மீது லேசான சந்தேகம் அடைந்த கார்த்திக் ராஜா அந்த நபர்களிடம் வேலை தொடர்பான உறுதியான செயல்பாட்டினை மேற்கொள்ளுமாறு கூறி கண்டித்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் இறுதியாக கேட்ட தொகையை தராவிட்டால் உங்களின் இதுநாள் வரையிலான பண பரிவர்த்தணை முடக்கப்பட்டுவிடும். பின்னர் அதனை விடுவிக்க சிங்கப்பூர் டாலரில் பணம் செலுத்த வேண்டும் என்று அச்சுறுத்தி உள்ளனர்.இதற்கு கார்த்திக் ராஜா மறுத்து எச்சரித்ததால் அவர் சுதாரித்து கொண்டதை உணர்ந்த மர்ம நபர்கள் அவருடன் தொடர்பு கொள்வதை துண்டித்துவிட்டனர்.
இதனால் பலமுறை அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோதும் முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை கார்த்திக்ராஜா உணர்ந்தார். இதனை தொடர்ந்து தன்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தான் செலுத்திய பணத்தினை பெற்றுத்தருமாறு கோரி கார்த்திக் ராஜா ராமநாதபுரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி இப்படியும் இணையதளம் மூலம் ஏமாற்றுகிறார்கள். கவனமாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story