புகார் பெட்டி
புகார் பெட்டி
மதுரை
பாழடைந்த பயணிகள் நிழற்கூடம்
விருதுநகர் மாவட்டம் கண்ணாயிருப்பு பகுதியில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. தற்போது இந்த கட்டிடம் பாழடைந்து எப்போது இடிந்து விழும் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் பயணிகள் பயணிகள் நிழற்கூடத்திற்குள் செல்வதில்லை. வெயிலிலும், மழையிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பழுதடைந்த நிழற்கூட கட்டிடத்தை இடித்து விட்டு புதிய பயணிகள் நிழற்கூடத்தை கட்டித்தர வேண்டும்.
கண்ணன், கண்ணாயிருப்பு.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
மதுரை வாடிப்பட்டியை அடுத்த வடகாடுபட்டி பெரியார்நகரில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. அதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படுமா?
முத்துப்பாண்டி, மதுரை.
சேதமடைந்த மயான கட்டிடம்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவுக்கு உட்பட்ட குறிச்சி ஊராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகன எரிேமடை கட்டப்பட்டது. ஆனால் தற்போது இந்த மயான கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. கட்டப்பட்டு சில மாதங்களிலேயே சேதமடைந்துள்ளதால் இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரேம், இளையான்குடி.
குப்பை தொட்டி வேண்டும்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட நாகமலை புதுக்கோட்டை கிராம ஊராட்சியில் உள்ள ராதா கிருஷ்ணன் தெருவில் குப்பை தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டி செல்கின்றனர். இதன் காரணமாக அங்கு துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால் உடனடியாக இப்பகுதியில் குப்பை தொட்டி அமைக்க வேண்டு்ம்.
ரோகித் குமார், மதுரை.
இருளடைந்த சாலை
விருதுநகரிலிருந்து சிவகாசி செல்லும் சாலையில் அழகாபுரி விலக்கு அருகே இரவில் அதிக இருளாக உள்ளது. தெருவிளக்கு வசதி இல்லாததால் அடிக்கடி விபத்தும் நடக்கிறது. மேலும், வழிப்பறி சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, இங்கு உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்.
பரத்ராஜா, விருதுநகர்.
குவிந்து கிடக்கும் குப்பை
மதுரை மாவட்டம் புதூர் கணேசபுரம் முதல் தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குப்பைகள் சாலையோரத்தில் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு ெசல்ல வேண்டிய அவல நிலை காணப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
விஜயகிருஷ்ணன், மதுரை.
சுகாதார சீர்கேடு
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சி, கீைழயூர் காலனியில் கழிவு நீர் செல்ல வழி இல்லாத காரணத்தால் தெருவில் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, கழிவுநீர் செல்ல வழி செய்ய வேண்டும்.
பூபாண்டி, இளையான்குடி.
நாய்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் 10 மற்றும் 11-வது வார்டு பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்கள் தெருவில் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முகமத்ரபீக், ராஜபாளையம்.
Related Tags :
Next Story