புகாா் பெட்டி
தினத்தந்தி புகாா் பெட்டி
புகார் பெட்டி
சேறும் சகதியுமான வளாகம்
கோபி அருகே உள்ள பா.வெள்ளாளபாளையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சுற்றுப்புற பகுதிகளில் இருந்து கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் உள்பட வெளி நோயாளிகள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். தொடர் மழையால் ஆரம்ப சுகாதாரநிலையத்தின் வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. மேலும் சிகிச்சை பெற வருவோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சுகாதார நிலையத்தின் முன்பு மழை நீர் தேங்காதவாறு கல், மண் கொட்டி சமன் செய்ய சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கணேசன், கோபி.
குவிந்து கிடக்கும் குப்பை
கோபி நகராட்சி சார்பில் பச்சைமலைக்கு செல்லும் ரோட்டில் நம்ம டாய்லெட் என்ற பெயரில் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால் இந்த கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லாததால் பயன்படு்த்த முடியாமல் கிடக்கிறது. தற்போது அதன் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மழைக்காலம் என்பதால் குப்பைகள் தண்ணீரில் மக்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ‘நம்ம டாய்லெட்’டுக்கு தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
நாதன், கோபி
முட்புதர்கள் அகற்றப்படுமா?
அந்தியூர் அருகே எண்ணமங்கலம் பிரிவு ரோடு முதல் செலம்பூர் அம்மன் கோவில் செல்லும் ரோட்டின் இருபுறங்களிலும் முட்புதர்கள் வளர்ந்துள்ளன. அதனால் வாகனங்கள் எதிர்எதிரே வரும்போது விலகிச்செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி முட்புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்ச்செல்வன், எண்ணமங்கலம்
வேகத்தடை வேண்டும்
பெருந்துறை ஆர்.எஸ். ரோடு-சென்னிமலை ரோட்டில் உள்ளது உலகபுரம். இந்த சாலையின் அருகில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த ரோட்டில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளிக்கு அருகில் உள்ள சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், உலகபுரம்
உடைந்த சாக்கடை வடிகால்
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் 10 அடி அகலம் உள்ள குறுகிய சந்து உள்ளது. இந்த சந்தின் இருபுறமும் உள்ள சாக்கடை வடிகால் உடைந்து கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பல்வேறு வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளதால் உடனடியாக சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும். மேலும் அந்த பகுதியில் உள்ள குண்டும் குழியுமான ரோட்டையும் செப்பனிட வேண்டும்.
சிவகாமி, ஈரோடு.
ஆபத்தான குழி
ஈரோடு குப்பைக்காடு பகுதியில் ஏராளமான வீடுகள் மற்றும் மாநகராட்சி பள்ளிக்கூடம் உள்ளது. மேலும் இந்த பகுதியில் பார்சல் அலுவலகமும் உள்ளது. இந்த ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை குழியில் இருந்து தண்ணீர் வெளியே வீணாக சென்றது. இதனால் சிறிய குழியாக இருந்தது. தற்போது பெரிய குழியாக ஆகிவிட்டது. அதனால் அந்த வழியாக நடந்து செல்வோர் பெரிதும் சிரமப்படுகிறார்கள். மேலும் கனரக வாகனங்கள் இந்த குழியில் சிக்கி கொள்கிறது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இந்த ஆபத்தான குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விநாயகமூர்த்தி. ஈரோடு.
பாராட்டு
கோபி மாதேசியப்பன் வீதியில் கிழக்குப் புறத்தில் இணைப்புச் சாலை செல்கிறது. இங்கு குடிநீர் குழாய் அமைப்பதற்காக கட்டப்பட்ட தொட்டியின் மேல் சிலாப் வைத்து மூடாமல் அப்படியே விட்டுவிட்டார்கள். இதுபற்றிய செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொட்டியின் மீது சிலாப் வைத்து மூடப்பட்டுள்ளது. எனவே செய்தி வெளியிட்டு் உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கோபி
------------
Related Tags :
Next Story