தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கழுத்தை அறுத்து கட்டிட காண்டிராக்டர் தற்கொலை
தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கழுத்தை அறுத்து கட்டிட காண்டிராக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
கட்டிட காண்டிராக்டர்
சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (வயது 33). கட்டிட காண்டிராக்டர். இவருடைய மனைவி திவ்ய பாரதி (28). இவர்களுக்கு திருமணமாகி 1½ வருடங்களே ஆகிறது. மஞ்சுநாதன், தொழிலாளர்களை வைத்து பல இடங்களில் கட்டிடம் கட்டி வந்தார்.
கடந்த ஒரு வாரமாக செங்கல், மணல், ஜல்லி ஆகிய கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியவில்லை, கட்டிட காண்டிராக்ட்டில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக தனது மனைவி மற்றும் உறவினகளிடம் கூறி கவலைப்பட்டதாக கூறப்படுகிறது.
கழுத்தை அறுத்து தற்கொலை
நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பணிக்கு சென்ற மஞ்சுநாதன், இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை சேலையூர் அடுத்த மப்பேடு பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடம் அருகே அவரது குடும்பத்தினர் சென்று பார்த்தபோது அங்கு அவரது இருசக்கர வாகனம் மட்டும் தனியாக நின்றிருந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் அவரை குடும்பத்தினர் தேடினர். அப்போது அருகிலுள்ள சுடுகாட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மஞ்சுநாதன் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு அருகில் பேப்பர் அறுக்கும் சிறிய கத்தி கிடந்தது. எனவே அவர், கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.
தொழிலில் நஷ்டம்
இதுபற்றி தகவல் அறிந்துவந்த சேலையூர் போலீசார், மஞ்சுநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மஞ்சுநாதன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்தது, விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story