கால்நடைகளை சாலையில் திரிய விடும் உரிமையாளர்களுக்கு சிறை; போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


கால்நடைகளை சாலையில் திரிய விடும் உரிமையாளர்களுக்கு சிறை; போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 Oct 2021 3:21 PM IST (Updated: 28 Oct 2021 3:21 PM IST)
t-max-icont-min-icon

கால்நடைகளை சாலையில் திரிய விடும் உரிமையாளர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உயிரிழப்புகள் ஏற்படுகிறது

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை உள்பட அனைத்து சாலைகளிலும் கூட்டம் கூட்டமாக கால்நடைகள் குறிப்பாக மாடுகள் சுற்றி வருவதுடன் சாலைகளிலேயே படுத்து கொள்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதாக பரவலாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.

குறிப்பாக இரவு நேரங்களில் போதிய வெளிச்சமில்லாமல் இது போன்ற விபத்துகள் அதிக அளவில் நடைபெறுகிறது. மேலும் பாதசாரிகளும் சாலையை கடக்கும் போது மிகுந்த அச்சத்துடனேயே கடந்து செல்ல வேண்டியுள்ளது. இது தவிர இவ்வாறான விபத்துக்களால் கால்நடைகளும் உயிரிழக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நேற்று வரை சாலையில் சுற்றி திரிந்த கால்நடைகள் மீது மோதி 36 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக 17 பேர் இறந்துள்ளனர். எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.

சிறைத்தண்டனை

அவ்வாறின்றி தங்களது கால்நடைகளை சாலைகளில் அபாயகரமாக திரிய விடும் கால்நடை உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு நகர்ப்புறங்களில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை விதிகள்) சட்டம் 1997-ன்படி 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 289-ன் படி பிராணிகள் வதை தடுப்பு சட்டம் பிரிவு 11(H)-ன்படியும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடுமையாக எச்சரிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் கைப்பற்றப்பட்டு கோசாலைகளில் ஒப்படைக்கப்படும். பொதுமக்களும் தங்கள் பகுதியில் கால்நடைகள் பொது சாலைகள் மற்றும் பொது இடங்களில் சுற்றி திரிவது பற்றி தெரியவந்தால் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு 6379904848 என்ற தொலைபேசி மூலமாகவோ, வாட்ஸ்அப் மூலமாகவோ தகவல் தெரிவித்து சாலை விபத்துகளை தவிர்க்க மாவட்ட போலீஸ்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தகவல் தருபவர்களின் அடையாளம் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story