சப்-கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆலோசனை
சப்கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆலோசனை
பொள்ளாச்சி
சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டத்தில் கிணத்துக் கடவு சர்வீஸ் சாலை வழியாக பஸ்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
போக்குவரத்து நெருக்கடி
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அதிகாரிகள் பேசும்போது கூறியதாவது:-
பொள்ளாச்சி நகரில் காந்தி சிலை பகுதியில் ரவுண்டான அமைக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. கோவை ரோடு மகாலிங்கபுரம் ஆர்ச் முதல் தேர்நிலை திடல் வரை ரோட்டோரத்தில் வாகனங்களை நிறுத்துகின்றனர். எனவே நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நகருக்குள் கனரக வாகனங்கள் வருவதை தடுக்க கிழக்கு புறவழிச்சாலை வழியாக வாகனங்களை திருப்பி விட வேண்டும். கோதவாடி, சென்றாம்பாளையம், எஸ்.மேட்டுப்பாளையம் சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
மார்க்கெட் ரோடு, மீன்கரை ரோடு சந்திப்பு பகுதியில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை தவிர பல்லடம் ரோடு, உடுமலை ரோடு, கோவை ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் விபத்துக்கள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து ஒளிரும் ஸ்டிக்கர்களை பொருத்த வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் அரசு பஸ்கள் கோவில்பாளையம், தாமரைகுளம், கிணத்துக்கடவில் சர்வீஸ் சாலை வழியாக செல்வதில்லை. எனவே அரசு, தனியார் பஸ்களை சர்வீஸ் சாலை வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து வடக்குகாடு கிராமத்திற்கு சென்ற அரசு பஸ் இயக்கப்படாததால் பள்ளி மாணவ-மாணவிகள் சிரமப்படுவதாக புகார் வருகிறது. எனவே வடக்குகாட்டிற்கு பஸ் இயக்க வேண்டும். வடசித்தூர் செல்லும் பஸ்களை ஆரம்ப சுகாதார நிலையம் வரை செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
சரியான பதில் இல்லை
கூட்டத்தில் கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிகமாக விபத்துக்கள் நடைபெறும் இடங்கள், சாலை மோசமாக உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் தயார் செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையில் கூட்டத்தில் சப்-கலெக்டர் அந்த இடங்களை குறிப்பிட்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று கேட்டார். அதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரி சரியான பதில் கூறவில்லை.
இதனால் சப்-கலெக்டர் ஏற்கனவே கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த விவரங்கள் அடங்கிய கையேடு அனைவருக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது. அதை சரியாக படித்து கூட பார்க்க முடியாதா? என்று கூறினர். கூட்டத்தில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் தணிகவேல், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தமிழ்மணி, சீனிவாசன், தாசில்தார்கள் அரசகுமார், சசிரேகா, விஜயகுமார், வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story