இறுதிக்கட்டத்தை நெருங்கும் தாவரவியல் பூங்கா பணி
இறுதிக்கட்டத்தை நெருங்கும் தாவரவியல் பூங்கா பணி
வால்பாறை
வால்பாறை நகராட்சியில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியது. அதனால்விரைவில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வருகிறது.
சுற்றுலா தலங்கள்
வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்ப்பதற்கு கூழாங்கல் ஆறு, நீரார்அணை, சின்னக்கல்லார் அணை, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை, சோலையாறு அணை ஆகிய இடங்கள் உள்ளன. வால்பாறை பகுதியில் 2 நாட்கள் தங்கி சுற்றி பார்த்து விட்டு செல்வதற்கான சுற்றுலா தலங்களும் பெரியளவில் இல்லை.
காட்டு யானைகள் நடமாட்டம் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி சின்னக்கல்லார் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறையினர் அனுமதிப்பதில்லை.
தாவரவியல் பூங்கா
இந்த நிலையில் வால்பாறை ஸ்டேன்மோர் எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதிக்கு அருகில் நகராட்சி நிர்வாகம் சார்பில் படகு இல்லமும், பி.ஏ.பி. காலனி பகுதியில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டது. அதன்படி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 4.25 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ.5 கோடி மதிப்பில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தாவரவியல் பூங்காவின் நுழைவு வாயிலில் வண்ண விளக்குகளுடன் கூடிய தண்ணீரை பீச்சியடிக்கும் நீரூற்றுகள் பணி, பூங்காவின் மேல் பகுதியில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கும் பணிகள், பூங்காவை சுற்றிலும், பூங்காவிற்குள்ளும் பல வண்ண விளக்குகள் அமைக்கும் பணிகள், பூங்காவில் பலவகையான செடி கொடிகள் பூஞ்செடிகள் நட்டு வைக்கும் பணிகளும் முடிவடைந்து விட்டது.
அழகுபடுத்தும் பணிகள்
தற்போது பூங்காவில் பார்வையாளர்கள் மாடம், பூங்காவை சுற்றிப் பார்ப்பவர்கள் நடந்து செல்லும் நடைபாதையில் கற்கள் பதிக்கும் பணி, நுழைவு வாயிலில் அழகுபடுத்தும் பணிகள், வர்ணங்கள் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் விரைவில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வருகிறது.
இதுகுறித்து சுற்றுலா வாகன ஓட்டிகள் கூறுகையில், வால்பாறையில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளது. மேலும் சாலையோர வியாபாரிகள் கடைகள் அமைத்து உள்ளனர். இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதோடு, கடைகளில் பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். மேலும் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் இருக்கும். எனவே உடனடியாக பூங்கா பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story