தேங்கி நிற்கும் கழிவுநீரால் டெங்கு பரவும் அபாயம்
தேங்கி நிற்கும் கழிவுநீரால் டெங்கு பரவும் அபாயம்
நெகமம்
நெகமம் காளியப்பம்பாளையத்தில் தேங்கும் கழிவுநீரால் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
நெகமம் பேரூராட்சிக்கு உட்பட்ட காளியப்பம்பாளையத்தில், கடந்த ஆண்டு சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. இப்பணி நிறைவு பெறாத நிலையில், சாக்கடையில் கழிவுநீர் தேங்கியது. இதனால், அய்யாசுவாமி கோவில் வீதியில் அமைந்துள்ள பொதுக்கழிப்பிடம் அருகே, கழிவு நீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது.
ஏற்கனவே, இப்பகுதியில் கொசு உற்பத்தி அதிகம். இதில் கழிவு நீரும் தேங்குவதால், சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படுகின்றனர்.
நோய் பரவும் அபாயம்
அதனால் கழிவு நீரை வெளியேற்றுவதோடு, சாக்கடை கால்வாய் பணியை முறையாக முடிக்க நெகமம் பேரூராட்சி நிர்வாகத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் கழிவுநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு நோய்கள் பரவம் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
முற்றுகை போராட்டம்
இதையடுத்து பேரூராட்சி அலுவலர்கள் பார்வையிட்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. அடுத்த சில நாட்களில் பணியை தொடங்காவிட்டால் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக 'ஜெய்ஹிந்த்' அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story