தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
குண்டும், குழியுமான சாலை
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட முள்ளிக்கொரை பகுதியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்கி நிற்பதால் சாலையில் குழிகள் இருக்கும் இடம் தெரியாததால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
வசந்த், முள்ளிக்கொரை.
திறந்தவெளியில் குப்பைகள்
ஊட்டி படகு இல்ல சாலையோரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனை ஆடு, மாடு போன்ற கால்நடைகள் உணவுக் கழிவுகளை தின்று வருகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. ஆகவே, திறந்தவெளியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
வசந்தி, ஊட்டி.
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி:
சாக்கடை அடைப்பு சரிசெய்யப்பட்டது
கோவை தாமஸ்வீதி பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால் வீதிகளில் கழவுநீர் தேங்கியது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசியது. இது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை அடைப்பை சரிசெய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
தாமோதரன், கோவை.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை கணபதி சின்னவேடம்பட்டி செல்லும் வழியில் உள்ள கோபாலகிருஷ்ணா மில் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குப்பைகள், ரோட்டின் ஓரத்தில் மலைபோல் கொட்டப்பட்டு உள்ளது. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே அதிகாரிகள் இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சூர்யா, சின்னவேடம்பட்டி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
கோவை காந்திமாநகர் அரசு வணிக வளாகம் பின்புறம் உள்ள தெருவில் கழிவுநீர் செல்ல வசதி இல்லாததால் அங்கு குளம் போன்று தேங்கி கிடக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
கணேசன், காந்திமாநகர்.
விபத்தை ஏற்படுத்தும் சாலை
கேகாவை விளாங்குறிச்சி சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக தண்ணீர்பந்தல் பகுதியில் படுமோசமாக உள்ளது. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகனங் களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி படுகாயத்துடன் உயிர் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே விபத்தை ஏற்படுத்தி வரும் இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
வை.பாலசுப்பிரமணியன், கோவை.
மின்விளக்குகள் வேண்டும்
கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப்பாடி ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள சாலையில் மின் விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே இங்கு மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேஷ், முள்ளுப்பாடி.
பள்ளி சுற்றுச்சுவரில் நோட்டீஸ்
கிணத்துக்கடவில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சுற்றுச்சுவரில் தற்போது நோட்டீஸ் அதிகளவில் ஒட்டப்பட்டு வருகிறது. சில நோட்டீஸ்கள் மாணவர்களின் முகம் சுளிக்கும் வகையில் இருக்கிறது. எனவே பள்ளி சுற்றுச்சுவரில் நோட்டீஸ் ஒட்டுவதை தடுப்பதுடன், அங்கு நோட்டீஸ் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குருபிரசாத், கிணத்துக்கடவு
சாலையில் அபாய குழி
கோவை புலியகுளத்தில் இருந்து சவுரிபாளையம் செல்லும் மெயின் ரோட்டில் சின்ன பாலம் அருகே ஒரு குழி உள்ளது. அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் இந்த குழியில் தற்போது பெய்த மழை காரணமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு விளம்பர பலகை வைத்து எச்சரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு நடுரோட்டில் இருக்கும் அபாய குழியை மூட வேண்டும்.
மகேந்திரன், சவுரிபாளையம்.
நிரம்பி வழியும் குப்பை தொட்டி
கோவை மாநகராட்சி 58-வது வார்டு பகுதியில் உள்ள இந்திரா கார்டன், பங்காரு லே-அவுட், பச்சாபாளையம் தோட்டம் ஆகிய பகுதிகளுக்கு குப்பைகளை கொட்ட ஒரே தொட்டிதான் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த தொட்டி விரைவில் நிரம்பிவிடுகிறது. தற்போது அந்த தொட்டி நிரம்பி வழிந்தும் குப்பைகள் அகற்றப்படவில்லை. எனவே குப்பைகளை அகற்றுவதுடன், கூடுதலாக குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்.
சந்திரமோகன், கோவை.
தெருவிளக்குகள் ஒளிருமா?
கோவை கணபதி போலீஸ் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் ஒளிரவில்லை. இதனால் இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுவதால், திருட்டு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பழுதான தெருவிளக்குகளை சரிசெய்து ஒளிர செய்ய வேண்டும்.
பாரதி, கணபதி.
சேறும், சகதியுமான சாலை
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் 10-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாலை சேறும், சகதியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக இருச்சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
முருகேஷ்குமார், சின்னியம்பாளையம்.
Related Tags :
Next Story