ரெயிலில் பட்டாசுகள் கொண்டு செல்வதை தடுக்க தனிப்படை அமைப்பு
ரெயிலில் பட்டாசுகள் கொண்டு செல்வதை தடுக்க தனிப்படை அமைப்பு
கோவை
கோவை ரெயில் நிலையத்தில் பட்டாசுகள் கொண்டு செல்வதை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பட்டாசுகள் கொண்டு செல்ல தடை
தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் வேலை செய்து வருபவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகிறார்கள். இதனால் பஸ்கள் மற்றும் ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழியும்.
இவ்வாறு சொந்த ஊருக்கு செல்பவர்கள் பட்டாசுகளையும் எடுத்து செல்வது உண்டு. அவ்வாறு கொண்டு செல்லும்போது வெடித்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ரெயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தனிப்படை அமைப்பு
இதை கண்காணிக்க ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ரெயிலில் இருந்து வரக்கூடிய பயணிகளின் உடைமைகள் முழுவதும் சோதனை செய்த பின்னரே அனுமதித்து வருகிறார்கள்.
மேலும் ரெயிலில் பட்டாசுகள் கொண்டு வரக்கூடாது என்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது:-
விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக ரெயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ள போலீசார் கண்காணிப்பு பணி, மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை செய்து வருகிறார்கள்.
தீவிர கண்காணிப்பு
அப்போது பட்டாசு அல்லது வெடிக்கக்கூடிய ஏதும் அபாயகரமான பொருட்கள் கொண்டு வந்தால், ரூ.1000 அபராதம் அல்லது 3 வருடம் சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் தனிப்படை போலீசார் ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story