ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு: கரும்புக்காக சண்டையிட்ட யானைகள்; போக்குவரத்து பாதிப்பு


ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு: கரும்புக்காக சண்டையிட்ட யானைகள்; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 29 Oct 2021 2:12 AM IST (Updated: 29 Oct 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்புக்காக யானைகள் சண்டையிட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தாளவாடி
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்புக்காக யானைகள் சண்டையிட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
10 வனச்சரகங்கள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம், ஜீர்கள்ளி உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஆசனூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதி வழியாக திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து 24 மணி நேரமும் இருந்து கொண்டே இருக்கும். மேலும் வனவிலங்குகள் இங்குள்ள வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவை தேடி அடிக்கடி இந்த தேசிய நெடுஞ்சாலையை கடப்பது வழக்கம். 
தொடர்கதை
தற்போது தாளவாடி மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் கரும்புகள், லாரிகளில் ஏற்றப்பட்டு சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. 
தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் யானைகள், அந்த வழியாக கரும்பு பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை வழிமறித்து அதில் உள்ள கரும்புகளை பிடுங்கி தின்பது வழக்கம். அவ்வாறு கரும்புகளை தின்று பழகிய யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு கரும்பு லாரிகளை வழிமறிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. 
கரும்பு லாரியை...
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ஆசனூர் அருகே காரப்பள்ளம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை எதிர்பார்த்து குட்டியுடன் பெண் யானை ஒன்று உலா வந்தது. அப்போது அந்த வழியாக கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று வந்தது. உடனே அந்த லாரியை யானை வழிமறித்தது. யானையை கண்டதும், லாரியை அதன் டிரைவர் அப்படியே நிறுத்தினார். 
இதைத்தொடர்ந்து லாரியின் அருகில் அந்த யானை சென்றது. பின்னர் லாரியில் இருந்த கரும்புகளை யானை துதிக்கையால் பிடுங்கி தின்றது. மேலும் சில கரும்புகளை பிடுங்கி தனது குட்டிக்கும் போட்டது. குட்டி யானை அந்த கரும்புகளை சுவைத்து தின்றது.
சண்டை
அப்போது அங்கு வந்த ஆண் யானை ஒன்று திடீரென குட்டியிடம் இருந்த கரும்பை பிடுங்கி சுவைக்க தொடங்கியது. இதை கண்டதும் பெண் யானைக்கு ஆத்திரம் ஏற்பட்டது. உடனே அது ஆத்திரத்துடன் பிளிறியபடி ஆண் யானையை நோக்கி சென்றது. பின்னர் ஆண் யானையிடம் பெண் யானை சண்டையிட்டது. இதையடுத்து ஆண் யானையிடம் இருந்த கரும்பை பெண் யானை பிடுங்கியது. இதைத்தொடர்ந்து பிடுங்கிய கரும்பை மீண்டும் குட்டி யானைக்கு போட்டது. இந்த காட்சிகளை அந்த வழியாக வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் தங்களுடைய செல்போனில் படம் பிடித்தனர். யானைகளின் சண்டை காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பிறகு யானைகள் தானாக வனப்பகுதிக்குள் சென்றவுடன், வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு சென்றன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story