வாலாஜாபாத் அருகே மினி லாரியில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி சிக்கியது


வாலாஜாபாத் அருகே மினி லாரியில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி சிக்கியது
x
தினத்தந்தி 29 Oct 2021 12:29 PM IST (Updated: 29 Oct 2021 12:29 PM IST)
t-max-icont-min-icon

போலீசாரின் சோதனையில் வாலாஜாபாத் அருகே 50 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட வல்லப்பாக்கம், இந்திராநகர், உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குடும்ப அட்டைக்கு நியாயவிலை கடைகளில் இலவசமாக வாங்கி வைத்துள்ள ரேஷன் அரிசியை விலை கொடுத்து வாங்கி, கடத்துவதாக வாலாஜாபாத் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் வாலாஜாபாத் போலீசார் காஞ்சீபுரம் ஓரகடம் சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த மினி லாரியை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

போலீசாரின் சோதனையில் 50 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மினி லாரியில் வந்த காஞ்சீபுரம் தாலுகா, கீழம்பி, பச்சையம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த லியோ சந்துரு (வயது 24) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் (17) ஆகிய 2 வாலிபர்களையும் வாலாஜாபாத் போலீசார் கைது செய்தனர்.

மேலும் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசி மற்றும் அதை ஏற்றி வந்த மினி லாரியையும் பறிமுதல் செய்து குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story