பள்ளிப்பட்டு அதிமுக ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து மாவட்ட கலெக்டர் முடிவு எடுப்பார் திருத்தணி ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவியாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஜான்சி ராணி செயலாற்றி வருகிறார். இந்த ஒன்றியத்தில் 12 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் உடல்நலக் குறைவு காரணமாக இறந்துவிட்டார். இதனால் ஒன்றிய கவுன்சிலர்கள் எண்ணிக்கை 11 ஆக குறைந்தது. இந்த நிலையில் ஒன்றிய குழு தலைவி ஜான்சி ராணி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அ.தி.மு.க.வைச் சேர்ந்த கவுன்சிலர்கள் உள்பட 9 பேர் கொண்டு வந்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யாவிற்கு மனு அளித்தனர்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு ஆர்.டி.ஓ. சத்யா அறிக்கை அனுப்பினார். அதன்படி நேற்று பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு கூட்ட அரங்கில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. சத்யா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பசுபதி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவி ஜான்சி ராணி, அ.தி.மு.க. கவுன்சிலர் வினாயக அம்மாள் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. மற்ற 9 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் நடத்த 10 கவுன்சிலர்கள் தேவை என்ற நிலையில் ஒரு கவுன்சிலர் எண்ணிக்கை குறைந்ததால் அவரது வருகைக்காக கூட்டம் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
போலீசார் குவிப்பு
ஆனால் அதன்பிறகும் ஒன்றிய குழு தலைவர், கவுன்சிலர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். அதன்படி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பார் என்று ஆர்.டி.ஓ. சத்யா தெரிவித்தார்.
அலுவலகத்தில் கூட்டம் தொடங்க இருந்தபோது அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட ஆவின் பால்வள தலைவர் வேலஞ்சேரி சந்திரன் தலைமையில் வக்கீல்கள் குழு அலுவலகத்திற்குள் சென்றது. இதை அறிந்த தி.மு.க.வைச் சேர்ந்த திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ரவீந்திரன் ஆகியோர் தலைமையிலான தி.மு.க. ஆதரவாளர்களும் அங்கு திரண்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு எந்தவித அசம்பாவிதமும் இல்லாத வகையில் ஆதரவாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 4 மணி நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story