பயிர் காப்பீட்டு தொகை வழங்கியதில் குளறுபடி


பயிர் காப்பீட்டு தொகை வழங்கியதில் குளறுபடி
x
தினத்தந்தி 30 Oct 2021 3:54 PM GMT (Updated: 30 Oct 2021 3:54 PM GMT)

அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறைவாக வழங்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டு தொகை வழங்கியதில் குளறுபடி நடைபெற்றுள்ளது என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

நாகப்பட்டினம்:
அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறைவாக வழங்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டு தொகை வழங்கியதில் குளறுபடி நடைபெற்றுள்ளது என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
 குறைதீர்க்கும் கூட்டம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:- 
பாபுஜி:- நாகை மாவட்டத்தில் பயிர் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு காப்பீட்டு தொகை குறைவாக வழங்கப்பட்டுள்ளது. பயிர் குறைவாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு காப்பீட்டு தொகை அதிகம் வழங்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டு தொகை வழங்கியதில் குளறுபடி நடந்துள்ளது. பயிர் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வந்த குழுவினர் முறையாக ஆய்வு செய்யவில்லை. எனவே இதுகுறித்து விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும். பயிர் பாதிப்பு குறித்து மீண்டும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
பயிர் காப்பீட்டு தொகை
மணியன்:- கடந்த 2020-21-ம் ஆண்டிற்கு வேதாரண்யம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 36 கிராமங்களில் 5 கிராமங்களுக்கு மட்டும் காப்பீடு தொகை மிக குறைவாக வழங்கப்பட்டுள்ளது. மொத்த வருவாய் கிராமத்தில் 45-ல் ஐந்து வருவாய் கிராமங்களுக்கு மட்டும் தான் கிடைத்துள்ளது. 
சரபோஜி:- பயிர்க்காப்பீட்டு இன்சூரன்ஸ் 2020-21-ம் ஆண்டிற்காக அரசு வழங்கப்பட்ட தொகை மாவட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பா சாகுபடி தொடங்கியுள்ளதால் உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்செல்வன்:-  டி.ஏ.பி. உரம் தட்டுப்பாடு நிலவி வருகிறது.. இஸ்ரேல் நாட்டில் இருந்து பொட்டாஷ் உரத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடிகால் வசதி
ஸ்ரீதர்:- நாகை மாவட்டத்தில் 80 கிராமங்களுக்கு பயிர் காப்பீட்டு நிறுவனம் பயிர் காப்பீட்டு தொகை இல்லை என கூறியுள்ளது வருத்தம் தருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரபாகரன்:-  பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். இழப்பீடு வழங்குதல் போன்றவற்றை அரசே நேரடியாக செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழையில் நீர் நிலைகளை பாதுகாக்கவும், மழை நீர் தேங்கி பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவும் வடிகால் வசதிகளை சரி செய்ய வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.

Next Story