மாமல்லபுரம் விடுதிகளில் தங்கும் பயணிகளின் தகவல்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் : போலீஸ் சூப்பிரண்டு
மாமல்லபுரம் விடுதிகளில் வந்து தங்கும் பயணிகளின் தகவல்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்து தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் அறிவுறுத்தினார்.
சுற்றுலா வந்து தங்கும் பயணிகள்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் உலக புகழ் பெற்ற, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா தலமாகும். இங்கு பல்லவ மன்னர்களின் கைத்திறனால் வடிவமைக்கப்பட்ட கடற்கரை கோவில், ஐந்துரதம், அாச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை காண உள்நாட்டு பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலரும் வருகின்றனர்.
அப்படி வருபவர்கள் இங்குள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், பண்ணை வீடுகளில் அறை எடுத்து தங்கி பொழுதை கழிப்பது வழக்கம். சமீப காலமாக சொத்து பிரச்சினை, குடும்ப வறுமை, கணவன் - மனைவி பிரச்சினை, தாய், தந்தையை இழந்தவர்கள், காதல் ஜோடிகள் உள்ளிட்ட பலர் இங்கு வந்து அறை எடுத்து தங்கும் போது, ஒரு சில நேரங்களில் அறையின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்வது, விஷம் குடித்து தற்கொலை செய்வது, கத்தியால் கையை அறுத்து ரத்தம் பீறிட செய்து தற்கொலை செய்வது, மது குடித்து விட்டு மாடியில் இருந்து குறித்து தற்கொலை செய்வது போன்ற குற்றச்சம்பவங்கள் அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளன.
ஆலோசனை கூட்டம்
விடுதி நிர்வாகத்தினரும் இதுபோன்ற தற்கொலை சம்பவங்களால் வழக்கை சந்திக்க செல்லுதல், போலீஸ் விசாரணைக்கு செல்லுதல் போன்ற சம்பவங்களால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. இந்த நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், பண்ணை வீடுகளின் உரிமையாளர்களை அழைத்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ரிசார்ட்டில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பேசிதாவது:- மாமல்லபுரத்திற்கு தினமும் ஏராளமான கற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அப்படி வரும் பயணிகள் இங்கு ஓட்டல்களில் அறை எடுத்து தங்குகின்றனர். அப்படி தங்கும் பயணிகளிடம் இருந்து ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஒரு சில விடுதி உரிமையாளர்கள் முறையாக பதிவு செய்வதில்லை என தொடர்ந்து புகார்கள் வருகிறது. எனவே, இங்கு வந்து தங்கும் பயணிகளின் பெயர்கள், அவர்கள் எந்த ஊர்? என்ன தொழில் செய்கின்றனர். தங்கும் பயணிகளின் உறவு முறைகள் என்ன? என்பது போன்ற தகவல்களை ஆதார் அட்டை அல்லது வேறு ஏதாவது ஒரு அடையாள அட்டை பெற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தங்குபவர்களின் புகைப்படங்களை கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்து, அவர்கள் அறைகளை காலி செய்து செல்லும் வரை அவர்களுக்கு புகைப்படங்களையும், தகவல்களையும் கம்ப்யூட்டரில் பாதுகாக்க வேண்டும். மேலும் தினமும் அறைகளில் யார் வந்து தங்குகிறார்களோ அவர்களின் தகவல்கள் உடனடியாக போலீஸ்துறைக்கு தெரிவிக்க வேண்டும். முகப்பு வாயில் முன்பு அருகில் உள்ள சாலைகள், தெருக்கள் தெரியும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
5 ஆண்டு சிறை
தங்கும் பயணிகளின் தகவல்களை போலீஸ்துறைக்கு தெரிவிக்கவில்லை என்றால் முன்பு ரூ.500 அபராதம் விதிக்கும் சட்டம் இருந்தது. ஆனால், தற்போது 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை பயன்படுத்தும் சூழ்நிலைக்கு போலீஸ் துறையை தள்ளிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், முறையான தகவல்களை போலீஸ் துறைக்கு தெரிவிக்கவில்லை என்றால் ஓட்டல், தங்கும் விடுதிகள், பண்ணை வீடுகளின் உரிமையாளர்கள் மீது எந்தவித பாரபட்சமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மறறும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story