தென்னையில் வேர் வாடல்நோயை கட்டுப்படுத்துவது எப்படி?
தென்னையில் வேர் வாடல்நோயை கட்டுப்படுத்துவது எப்படி?தென்னையில் வேர் வாடல்நோயை கட்டுப்படுத்துவது எப்படி?
பொள்ளாச்சி
தென்னையில் வேர் வாடல் (பைட்டோபிளாஸ்மா) நுண்ணுரியினால் ஏற்படுகிறது. இது ஒரு மரத்தில் இருந்து அடுத்த மரத்திற்கு சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி மற்றும் கண்ணாடி இறக்கை பூச்சிகள் மூலமாக பரவுகிறது. இலைகள் முதலில் கீழ்நோக்கி வளைந்து மனிதனின் விலா எலும்பு போன்று காணப்படும். மேலும் நடுவில் உள்ள மட்டைகளின் இலைகள் மஞ்சள் நிறமாக காணப்படும்.
இலையின் ஓரங்கள் கருகி பலமான காற்று அல்லது மழையின் போது இலையின் கருகிய பகுதிகள் மரத்தில் இருந்து உதிர்ந்து விடுவதால் குச்சிகள் மட்டும் நீட்டி கொண்டிருக்கும். மேற்கண்ட அறிகுறிகள் நோய் முற்றிய நிலையில் உள்ள மரங்களில் அதிகமாக காணப்படுகிறது.
மேலும் இந்த நோயை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய வேளாண்மை உதவி இயக்குனர் நாகபசுபதி கூறியதாவது:-
குருத்து கருகுதல், பூங்கொத்து கருகுதல், மொட்டு உதிர்தல் மற்றும் வேர் அழுகுதல் ஆகியவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாக மரத்தில் தென்படும். குரும்பைகள் கொட்டுதல், மட்டைகள் மற்றும் தேங்காய் பருப்புகளின் தடிமன் குறைதல் நீர் மற்றும் தாது உப்புகள் உறிஞ்சும் திறன் பாதிக்கப்படுதல் எண்ணெய் சத்து குறைந்து காணப்படுதல் மற்றும் இலைப்பகுதியில் உள்ள திசுக்கள் சுருங்கி, அதன் தடிமன் சிறியதாக காணப்படுதல் ஆகியவை இதன் மற்ற அறிகுறிகளாகும்.
ஆண்டிற்கு 10 காய்களுக்கும் குறைவாகவே காய்க்கும். மிக அதிகளவு நோயுற்ற மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதால் மற்ற மரங்களுக்கு நோய் பரவுதல் தடுக்கப்படுகிறது.நோய் தாக்கப்பட்ட மரங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க உர மேலாண்மையில் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளான தொழு உரம் 50 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ, சூடோமோனாஸ் 200 கிராம், யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 3.5 கிலோ, மெக்னீசியம் சல்பேட் ஒரு கிலோ ஆகியவற்றை ஆண்டிற்கு ஒரு மரத்திற்கு இட வேண்டும்.
வட்டப்பாத்தியில் இருந்து பசுந்தாள் உரங்களான தட்டை பயிர், சணப்பை, கலப்பகோணியம், தக்கை பூண்டு போன்றவற்றை ஏப்ரல், மே மாதங்களில் பயிரிட்டு பூக்கும் முன்னரே உழுதுவிட வேண்டும். தென்னையில் வயதுக்கு ஏற்ப ஊடுபயிர்களாக வாழை, மிளகு, கோகோ, மஞ்சள், இஞ்சி, கிழங்கு வகைகள், அன்னாச்சி, காபி, ஜாதிக்காய் மற்றும் மரவள்ளி போன்ற பயிர்களை பயிரிட்டு வருமானத்தை பெருக்கலாம்.
நோய் காரணியான இறக்கை பூச்சிகளை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கு பவுடர் 250 கிராமை அதே அளவு மணலுடன் கலந்து குருத்தில் மற்றும் மட்டை தண்டுகளில் இடவேண்டும். அல்லது டைமீதோபேட் 1.5 மில்லி லிட்டர் மருந்தை ஒரு மில்லி ஒட்டுத்திரவம் ஒரு லிட்டர் நீரில் கலந்து ஒரு மாத இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
----------------
Related Tags :
Next Story






