வியாபாரியை தாக்கி 2 கிலோ தங்கம் ரூ 7 லட்சம் கொள்ளை
வியாபாரியை தாக்கி 2 கிலோ தங்கம் ரூ 7 லட்சம் கொள்ளை
வடவள்ளி
கோவை வடவள்ளியில் வியாபாரியை தாக்கி 2 கிலோ தங்கம், ரூ.7 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை வியாபாரி
கோவையை அடுத்த வடவள்ளியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 50), நகை வியாபாரி. இவர் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் தங்க கட்டிகளை வாங்கி வந்து அவற்றை உருக்கி நகைகளாக செய்து விற்பனை செய்து வருகிறார்.
இதற்காக சண்முகம் சத்திய மங்கலம் சென்றார். பின்னர் அவர் அங்கு தங்க கட்டிகளை வாங்கியதுடன், ஏற்கனவே நகையை கொடுத்திருந்த கடைகளில் பணத்தை வசூல் செய்துவிட்டு கோவை திரும்பினார்.
2 பேர் வழிமறித்தனர்
கோவை காந்திபுரத்துக்கு பஸ்சில் வந்த அவர், பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் வடவள்ளிக்கு சென்று கொண்டு இருந்தார். இரவு 10.30 மணிக்கு வடவள்ளி-தொண்டாமுத்தூர் ரோட்டில் சென்றார். அந்த நேரத்தில் அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லை.
அப்போது திடீரென்று பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 பேர் திடீரென்று, சண் முகத்தை வழிமறித்து தடுத்து நிறுத்தினார்கள்.
பின்னர் அவர்கள் தங்களிடம் இருந்த கத்தியை எடுத்து, உன்னிடம் நகை, பணம் இருப்பது எங்களுக்கு தெரியும், அதை எங்களிடம் கொடுத்துவிடு என்று மிரட்டினார்கள். அதற்கு அவர் கொடுக்க மறுத்தார்.
ரூ.1 கோடி நகை, பணம் கொள்ளை
இதனால் கொலை மிரட்டல் விடுத்த 2 பேரும் சேர்ந்து சண்முகத்தை சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவரிடம் இருந்து 2 கிலோ தங்கம் மற்றும் ரூ.7 லட்சம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
அதன் மதிப்பு ரூ.1 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து சண்முகம், வடவள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார் கள்.
தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் விசாரணை
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள், சம்பவம் நடந்த இடம் மற்றும் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, கோவை காந்திபுரம் பஸ்நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த சண்முகத்தை, ஹெல்மெட் அணிந்து 2 ஆசாமிகள் பின்தொடர்ந்து வந்து உள்ளனர்.
சண்முகம் தங்கம் கொண்டு வந்ததை அறிந்தே மர்ம ஆசாமிகள் பின்தொடர்ந்து உள்ளனர். அந்த மர்ம நபர்களை வலைவீசி ேதடி வருகிறோம் என்றனர்.
Related Tags :
Next Story