தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக ஈரோடு ரெயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் குவிந்தனர்.
ஈரோடு
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் குவிந்தனர்.
பயணிகள் கூட்டம்
தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஈரோட்டில் தங்கியிருந்து வேலை பார்க்கும் வெளியூரை சேர்ந்தவர்கள் பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊரை நோக்கி படை எடுத்த வண்ணம் உள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஈரோடு வழியாக சென்ற ரெயில்களில் வழக்கத்தை காட்டிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
குடும்பத்துடன் வெளியூர் செல்பவர்கள் பெரும்பாலானோர் பஸ்களில் செல்வதை காட்டிலும், ரெயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் பயணிகள் ரெயில்களில் ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்திருந்தனர். நேற்று தென்மாவட்டங்களுக்கு சென்ற ரெயில்களில் பயணிகள் கூட்டம் காணப்பட்டது.
கூடுதல் பஸ்கள்
ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், அங்கு போலீசாரும் அடிக்கடி ரோந்து சுற்றி வந்தார்கள். ரெயில் நிலையத்தின் நுழைவு வாயிலிலேயே பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனையிட்டனர். அப்போது பயணிகள் தடையை மீறி பட்டாசு கொண்டு செல்கிறார்களா? என்று சோதனை செய்தனர். மேலும், ஓடும் ரெயிலிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்தவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி, அவர்களது விவரங்களை எழுதி வைத்து அனுப்பி வைத்தார்கள்.
இதேபோல் வெளியூர் சென்ற பஸ்களிலும் பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஜவுளிகள் வாங்குவதற்காக நேற்று ஈரோட்டுக்கு வந்தார்கள். இதனால் ஈரோடு பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. அங்கு ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தங்களது உடைமைகளை பாதுகாத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. முக கவசம் அணிந்து செல்ல வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து வெளியூர்களுக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.
Related Tags :
Next Story