10 தொகுதிகளில் 30,84,565 வாக்காளர்கள்
10 தொகுதிகளில் 30,84,565 வாக்காளர்கள்
கோவை
கோவையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 30 லட்சத்து 84 ஆயிரத்து 565 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்.
வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப் பட்டது. அதன்படி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் வெளியிட்டார். அதை அரசியல் கட்சியினர் பெற்றுக்கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி மாவட்டத்தில் 15 லட்சத்து 19 ஆயிரத்து 419 ஆண் வாக்காளர்கள், 15 லட்சத்து 64 ஆயிரத்து 628 பெண் வாக்காளர்கள்
மற்றும் 3-ம் பாலினத்தவர் 518 பேர் என மொத்தம் 30 லட்சத்து 84 ஆயிரத்து 565 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்களை விட 45 ஆயிரத்து 209 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
பெயர் நீக்கம்
கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி வெளியிடப் பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 30 லட்சத்து 82 ஆயிரத்து 28 வாக்காளர்கள் இருந்தனர். அதன்பிறகு, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களிடம் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மேலும் பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி இறந்து போன 7 ஆயிரத்து 796 பேர், இடம் பெயர்ந்த 4 ஆயிரத்து 614 பேர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ள 3 ஆயிரத்து 66 பேர் என மொத்தம் 15 ஆயிரத்து 476 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
புதிதாக 8 ஆயிரத்து 798 ஆண், 9 ஆயிரத்து 116 பெண், 3-ம் பாலினத்த வர்கள் 99 பேர் என மொத்தம் 18 ஆயிரத்து 13 வாக்காளர்களின் பெயர் சேர்க்கப்பட்டது.
கவுண்டம்பாளையம், வால்பாறை
கோவை மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதியாக கவுண்டம்பாளையம் உள்ளது.
இங்கு 2 லட்சத்து 32 ஆயிரத்து 807 ஆண், 2 லட்சத்து 33 ஆயிரத்து 859 பெண், 3-ம் பாலினத்தவர் 135 பேர் என மொத்தம் 4 லட்சத்து 66 ஆயிரத்து 801 வாக்காளர்கள் உள்ளனர்.
குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக வால்பாறை உள்ளது. இங்கு 97 ஆயிரத்து 659 ஆண், 1 லட்சத்து 6 ஆயிரத்து 60 பெண், 3-ம் பாலினத்தவர்கள் 20 பேர் என மொத்தம் 2 லட்சத்து 3 ஆயிரத்து 739 வாக்காளர்கள் உள்ளனர்.
சிறப்பு முகாம்
இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் வருகிற 13,14 மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிக ளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
இதில், 1.1.2022-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
இதில், பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்க படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8-ஐ பயன்படுத்த வேண்டும்.
மேலும் www.nvsp.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். இதுதவிர voters helpline செயலி மூலமாகவும் பொதுமக்கள் தங்களது விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம் என பொள்ளாச்சி சப்-கலெக்டர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story