தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது


தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது
x
தினத்தந்தி 2 Nov 2021 2:33 AM IST (Updated: 2 Nov 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது

மதுரை
மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது.
தடுப்பூசி திட்டம்
தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரே பாதிப்புகள் படிப்படியாக குறைய தொடங்கியது. தற்போது முழுமையாக கொரோனா பாதிப்பு குறையாமல் தினமும் குறைந்த எண்ணிக்கையில் பாதிப்புகள் பதிவாகி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதமாக இருந்தது கொரோனா தடுப்பூசி தான்.
முதற்கட்டமாக முன் களப்பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், காவல்துறை சார்ந்தவர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 18 வயது நிரம்பியவர்கள் முதல் 60 வயதை கடந்தவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
20 லட்சம்
அதன் அடிப்படையில், மதுரை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 20 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மதுரையில் கடந்த 7 வாரங்களாக நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் இந்த இலக்கை அடைய முடிந்தது. மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் தடுப்பூசி செலுத்துவது குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. அதன் மூலமே அதிக அளவில் மக்கள் தடுப்பூசி செலுத்த வந்தனர்.
தடுப்பூசி செலுத்தாதவர்கள் யார், யார் என்பது குறித்து கண்டறியும் பணியும் நடக்கிறது. மேலும், வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணியும் ஒருபுறம் மும்முரமாக நடந்து வருகிறது. எனவே தகுதியுள்ள அனைவரும் ஆதார் அட்டையை காண்பித்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். பொதுமக்களின் வசதிக்காக 1 லட்சத்து 99 ஆயிரத்து 680 தடுப்பூசிகள் மாவட்ட சுகாதார கிடங்கில் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story