கன்டெய்னர் லாரியை கடத்தி ரூ.1½ கோடி பொருட்கள் கொள்ளை
பெங்களூருவில் கன்டெய்னர் லாரியை கடத்தி ரூ.1½ கோடி மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த அசாமை சேர்ந்த டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெங்களூரு: பெங்களூருவில் கன்டெய்னர் லாரியை கடத்தி ரூ.1½ கோடி பொருட்களை கொள்ளையடித்த அசாமை சேர்ந்த டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம்
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசகோட்டை அருகே அனுகொண்டனஹள்ளி பகுதியில் தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துக்கு சொந்தமான குடோன் உள்ளது. பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் வரும் வீட்டு உபயோக பொருட்கள், எலெக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னர் லாரி மூலம் எடுத்து சென்று அனுகொண்டனஹள்ளியில் உள்ள குடோனில் சேமித்து வைப்பது வழக்கம்.
அதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து ரூ.1.60 கோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றிக் கொண்டு குடோனை நோக்கி கன்டெய்னர் லாரி சென்றது.
கன்டெய்னர் லாரி கடத்தல்
ஆனால் அந்த லாரி, குடோனை சென்றடையவில்லை. இதனால் தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தினர் அந்த லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். மூலம் லாரியின் இருப்பிடத்தை கண்டறிய முயன்றனர். ஆனால் ஒசக்கோட்டை பகுதியில் வைத்து லாரியின் ஜி.பி.எஸ். இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
மேலும் லாரி டிரைவரான அசாமை சேர்ந்த அஜய் என்பவரும் மாயமாகி இருந்தார். இதனால் ரூ.1.60 கோடி பொருட்களுடன் கன்டெய்னர் லாரி கடத்தப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
ரூ.1.60 கோடி பொருட்கள் கொள்ளை
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ரூ.1.60 கோடி பொருட்களுடன் கடத்தப்பட்ட கன்டெய்னர் லாரி கோலார் தாலுகா சுஞ்சதேவனஹள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தது. இதுபற்றி அறிந்ததும் பெங்களூரு போலீசார் விரைந்து சென்று அந்த லாரியை சோதனை செய்தனர்.
ஆனால் அந்த லாரியில் இருந்த பொருட்கள் மாயமாகி இருந்தன. இதனால் மர்மநபர்கள், லாரியை கடத்தி ரூ.1.60 கோடி மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
டிரைவருக்கு வலைவீச்சு
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், லாரி டிரைவர் அஜய் லாரியை கடத்தி பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் அஜயை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story