நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு


நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 2 Nov 2021 7:50 PM IST (Updated: 2 Nov 2021 7:50 PM IST)
t-max-icont-min-icon

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கோவை

கோவையில் விடிய விடிய பெய்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 21 குளங்கள், தடுப்பணைகள் நிரம்பின.

விடிய, விடிய மழை

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில் கோவையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. 

அது சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறி நேற்று காலை வரை கோவை மாநகர் உள்பட மாவட்டத்தில் பல இடங்களில் விடியவிடிய மழை கொட்டி தீர்த்தது.

இதனால் லங்கா கார்னர், சோமசுந்தரம் மில் அருகே ரெயில்வே பாலத்தின் கீழ்பகுதி, கிக்கானி பள்ளி ரெயில்வே பாலத்தின் கீழ், ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர் சிக்னல் உள்பட பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

போக்குவரத்து நெரிசல்

கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ்பகுதியில்  பல அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி நின்றது. அந்த தண்ணீர் நேற்று மதியம் வரை வடியாமல் இருந்தது. 

இதனால் பாலத்துக்கு கீழ் வாகனங்கள் செல்லாதவாறு சாலையின் குறுக்கே போலீசார் இரும்புத் தடுப்புகள் வைத்தனர்.

 இதனால் அனைத்து வாகனங்களும் பாலத்தின் மேல் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

தீபாவளி பண்டிகையை கொண்டாட கோவையில் வசிக்கும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். 

இதனால் கோவை- திருச்சி ரோடு சிங்காநல்லூர் பகுதியில் நேற்று காலை முதல் இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

மேலும் சிங்காநல்லூர் சிக்னல் அருகே மழைநீர் குட்டை போல் தேங்கி நின்றது. இதனால் வாகனங்கள் 1 கிலோ மீட்டருக்கு மேல் நீண்டவரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 830 கன அடி அளவிற்கு தண்ணீர் பாய்ந்தோடியது. 


இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் உள்ள சித்திரைச்சாவடி தடுப்பணை, சுண்ணாம்பு காளவாய் தடுப்பனை, புட்டுவிக்கி தடுப்பணை, குனியமுத்தூர் தடுப்பணை, 

நஞ்சுண்டாபுரம் தடுப்பணை உள்ளிட்ட தடுப்பணைகள் நிரம்பின. இதனால் அந்த அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேறி பாய்ந்தோடுகிறது. இதை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

21 குளங்கள் நிரம்பின

நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீர் வெள்ளலூர் குளம், குறிச்சி குளம் உள்பட பல்வேறு குளங்களுக்கு திருப்பி விடப்பட்டது. 

மேலும் நொய் யல் ஆற்று வழித்தடத்தில் உள்ள கோளராம்பதி குளம், வேடப் பட்டி புதுக்குளம், முத்தண்ணன் குளம், நரசாம்பதி குளம், கிருஷ்ணாம் பதி குளம், செங்குளம் உள்பட 21 குளங்கள் நிரம்பின. 

அந்த குளங்களில் இருந்து உபநீர் வாய்க்கால்களில் வெளியேறி செல்கிறது. 

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் பொது மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவே அல்லது துணி துவைக்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சுண்டக்காமுத்தூர் நரிகுறவர் காலனியை மழைநீர் சூழ்ந்தது. அங்கு உள்ள வீடுகளின் அருகே மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள்  அவதிப்பட்டனர்.

 மழைசேத பாதிப்பை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. 

மேலும் தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 

மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கோவையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-

அன்னூர்-4, மேட்டுப்பாளையம்-29.1, சிங்கோனா-3, சின்னக்கல் லாறு-19, வால்பாறை பி.ஏ.பி.-6, வால்பாறை தாலுகா-5, சோலை யாறு-10, ஆழியாறு-11, சூலூர்-35, பொள்ளாச்சி-35, கோவை தெற்கு-52, விமான நிலையம்-26, பெரியநாயக்கன்பாளையம்-14.2, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்-51.

Next Story