தாமதமாக தொடங்கிய கோமாரி தடுப்பூசி பணிகள்
மழைக்காலத்திற்கு முன் மாடுகளுக்கு போடப்படும் கோமாரி நோய் தடுப்பூசி, மழை வந்த பிறகு போடப்படுகிறது. இது போதிய பலன் தருமா என்று கால்நடை விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர்.
மதுரை,
மழைக்காலத்திற்கு முன் மாடுகளுக்கு போடப்படும் கோமாரி நோய் தடுப்பூசி, மழை வந்த பிறகு போடப்படுகிறது. இது போதிய பலன் தருமா என்று கால்நடை விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர்.
கோமாரி நோய்
மாடுகளை மழைக்காலத்தில் காணை எனும் கோமாரி நோய் தாக்கும். இந்த நோய் தாக்கிய மாடுகளின் வாய் மற்றும் கால்களில் கொப்பளங்கள் ஏற்படும். சரியான சிகிச்சை அளிக்காத நிலையில், மாடுகள் தீவனம் உண்ண முடியாமல் நடக்க முடியாமல் இறந்து விடும்.
இந்த நோயின் தீவிரத்தை உணர்ந்து அரசின் கால்நடை பராமரிப்பு துறை கோமாரி தாக்கம் ஏற்படும் மழைக் காலத்திற்கு முன்பே மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி இழப்பை தடுத்து விடுவார்கள்.
மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் தொடங்கி ஒவ்வொரு மாவட்டத்திலும் சரியான காலகட்டத்தில் போடப்பட வேண்டும். அதன்மூலம் தான் இந்த நோய் பரவலின் தாக்கத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும்.இது சாத்தியமா என்று தெரியவில்லை என்கிறார்கள் கால்நடை விவசாயிகள்.
பற்றாக்குறை
இது குறித்து, கால்நடை பராமரிப்பு துறையை சேர்ந்த பணியாளர் ஒருவர் கூறுகையில், கால்நடைகளுக்கு கோமாரி நோயை தடுக்க மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னதாக தடுப்பூசி போடப்பட்டு முடிக்கப்பட வேண்டும்.
ஆனால் தற்போது, பருவமழை தொடங்கிய நிலையிலும், கோமாரி சில இடங்களில் பரவ தொடங்கி விட்ட நிலையில் தடுப்பூசி போடும் பணி தாமதம் தொடங்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு, 21 நாட்களில் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கணக்குப்படி தினமும் குறைந்தது சுமார் 10 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். இது நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை. கால்நடை மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை உதவியாளர்கள் என அனைத்து நிலைகளிலும் 50 சதவீத பணியிடங்கள் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள நிலையில் இத்தனை குறுகிய கால அவகாசத்தில் தடுப்பூசி பணியை முடிக்க முடியுமா என்று தெரியவில்லை.
தடுப்பூசியை சேமிப்பது மற்றும் குறித்த நேரத்திற்கு எடுத்துக்கொண்டு போய் தடுப்பூசி பணிகளை மேற்கொள்வதிலும் சிரமம் இருந்து வருகிறது.
பெரும்பாலான இடங்களில் கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தடுப்பூசிகளை தங்கள் வீட்டில் அல்லது கால்நடை மருந்தகங்களில் உள்ள குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாக்கும் சூழலும் உள்ளது.
மாற்றம் வேண்டும்
கால்நடைகளை தாக்கும் கடுமையான நோய்களால் ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கான கால்நடைகள் பாதிப்புக்கு உள்ளாகும். இதனை தடுக்க சரியான காலகட்டத்தில் தடுப்பூசி போட வேண்டும். அதற்கு போதிய மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும். மேலும், தடுப்பூசிகளை பாதுகாக்கும் குளிரூட்டி அறைகள் மாவட்டந் தோறும் தடையின்றி இயங்க வழி செய்ய வேண்டும். இதன் மூலம் மட்டுமே கால்நடைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டு காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story